பெண் குழந்தை பிறந்ததால் ஏமாற்றமடைந்த இளம் தாய் அதை தலையணையால் அழுத்திக் கொலை செய்த சம்பவம் உத்தரப் பிரதேசத்தின் காஸியாபாத்தில் இடம்பெற்றுள்ளது.

ஆர்த்தி (22) என்ற அந்த இளம் தாய் மூன்று மாதங்களுக்கு முன்பு ஒரு பெண் குழந்தையை ஈன்றெடுத்தார். திடீரென்று குழந்தையைக் காணவில்லை என பொலிஸில் புகார் அளித்தார்.

அவர் மீது சந்தேகப்பட்ட பொலிஸார் கடுமையாக விசாரித்ததில், தானே குழந்தையைக் கொன்றதாக ஒப்புக்கொண்டார்.

ஆண் குழந்தையையே எதிர்பார்த்திருந்த அவருக்கு பெண் குழந்தை பிறந்திருக்கிறது. இதனால் கடும் ஏமாற்றமடைந்த அவர், கோபத்தில் தலையணையை குழந்தையின் முகத்தில் வைத்து அழுத்திக் கொலை செய்திருக்கிறார்.

அப்போதும் கோபம் தணியாமல், குழந்தையின் உடலை சலவை இயந்திரத்தில் போட்டுச் சிதைத்திருக்கிறார்.

ஆர்த்தியின் செயலுக்கும் தமக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்றும் தாம் ஒருபோதும் ஆண்பிள்ளைதான் வேண்டும் என்று கூறியதில்லை என்றும் ஆர்த்தியின் கணவர் குடும்பத்தினர் கூறியுள்ளனர்.

எனினும் பொலிஸார் அவர்களையும் விசாரணை வளையத்தினுள் கொண்டுவந்துள்ளனர்.