யாழ்ப்பாணம், சாவகச்சேரி, மீசாலைப் பகுதியில் நேற்று இரவு இரு வேறு இடங்களில் இடம்பெற்ற வாள் வெட்டுச் சம்பவங்களில் இளைஞர் இருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மீசாலை கிழக்கு - மதுவன் சனசமூகப் பகுதியிலுள்ள கடை ஒன்றினுள் புகுந்த அறுவர் கொண்ட வாள் வெட்டுக்குழுவினர் அங்கிருந்த இளைஞனை சமாரியாக வெட்டியதோடு கடைக்கும் சேதம்விளைவித்துவிட்டுத் தப்பிச் சென்றுள்ளனர்.

இதன்போது மீசாலை கிழக்கைச் சேர்ந்த செல்வராசா கஜவதனன் (20) என்ற இளைஞன் படுகாயமடைந்துள்ளார்.

அதனையடுத்து அதே வாள் வெட்டுக் குழுவினர் மீசாலை மாவடிப்பிள்ளையார் ஆலய வளாகத்தினுள் “கரம் ”விளையாடிக்கொண்டிருந்த இளைஞர்கள் மீது  வாள்களால் வெட்டிவிட்டு அங்கிருந்தது தப்பிச் சென்றுள்ளனர்.

இதன்போது மீசாலை மேற்கைச் சேர்ந்த அல்பிரட் டிலச்சன் (17) என்ற இளைஞர் காயமடைந்துள்ளார்.

காயமடைந்தவர்கள் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

வாள்வெட்டுச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சாவகச்சேரிப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.