( ஆ. பிரபுராவ் )

கடலில் கன மழை மற்றும் பலத்த காற்றுவிசக்கூடும் என்பதால் மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்லக்கூடாது என அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளதால் மீனவர்கள் எவரும் மீன்பிடிக்கச் செல்லவில்லை இதனால் ராமேஸ்வரம் துறைமுகம் வெறிச்சோடிக் காணப்பகிறது.

 வங்கக்கடலில் ஏற்பட்ட குறைந்த காற்றழுத்தாழ்வு நிலையால் ராமேஸ்வரம் பாம்பன் மற்றும் மண்டபம் கடலோரப்பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களாக கடல்சீற்றத்துடன் காணப்பட்டது.

இதனால் நாட்டுப்படகுகள் மற்றும் விசைப்படகுகள் பலத்த சேதமடைந்தது கடற்கரையோரபகுதிகளில் அமைந்துள்ள மீனவர்களின் குடிசைகள் மற்றும் மீன்கள் வைக்கும் குடிசைகள் பலத்த சேதமடைந்தது .

இந்நிலையில் சென்னை வானிலைமையம் எச்சரிக்கையை தொடாந்து  இராமநாதபுரம் மாவட்ட மீன்துறை அதிகாரிகள் கடலில் பலத்த மழை மற்றும் காற்றுவீச இருப்பதால் மீனவர்கள் எவரும் கடலுக்குச் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும்   மறு உத்தரவு வரும் வரை மீன்பிடி அனுமதி டோக்கனையும் இரத்து செய்துள்ளதாக அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது.

மீன்பிடி தடையால் ராமேஸ்வரம் பாம்பன் மண்டபம் உள்ளிட்ட பகுதிகளில்  சுமார் ஆயிரத்து 200 க்கும் அதிகமான  விசைபடகுகள் நங்கூரமிடப்பட்டுள்ளது. 

இதனால் மீன்பிடி தொழிலாளர்களும் சார்பு தொழிலாளர்கள் என சுமார் ஒரு இலட்சம் பேர் வேலையிழந்துள்ளனர்.

அதே போல மீன்பிடி சார்பு வர்த்தக நிறுவனங்களும் பூட்டப்பட்டுள்ளது.  இதனால்  நாள் ஒன்றுக்கு சுமார் ரூபா 1.5  கோடி வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளதாக மீனவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

மீன்பிடி தடையால் இராமநாதபுரம் மாவட்ட கடலோர துறைமுகங்கள் வெறிச்சோடிக்காணப்படுகிறது.