(எம்.எம் மின்ஹாஜ்)

தேசிய நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் முகமாக நீண்ட வருடங்களுக்கு பின்னர் தமிழ் மொழியில் தேசிய கீதம் இசைக்கப்பட்டுள்ளது. இது தமிழ் மக்களுக்கு அரசாங்கம் அளிக்கும் கௌரவமாகும் என ஐக்கிய தேசியக் கட்சியின் ஊடகப் பேச்சாளரும் கல்வி அமைச்சருமான அகில விராஜ் காரியவசம் கோரிக்கை விடுத்தார்.

இந்நிலையில், தேசிய கீதம் தமிழ் மொழியில் இசைக்கப்பட்டமைக்கு எதிராக இனவாதிகளினால் முன்னெடுக்கப்படுகின்ற போராட்டங்களுக்கு நாம் ஒருபோதும்  அஞ்சப்போவதில்லை. அரசின் நல்லிணக்க செயற்பாடுகளை இழிவுப்படுத்த வேண்டாம் எனவும் அவர் மேலும் கோரிக்கை விடுத்தார்.

இவ்வாறான போராட்டங்களுக்கு அச்சம் கொண்டால் நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியாது. போராட்டங்களினால் எதனையும் சாதிக்க முடியும் என்பது தப்பான எண்ணமாகும். இதனை அரசாங்கம் கணக்கில் எடுக்காது என்றும் அவர் குறிப்பிட்டார்.

நாட்டின் 68 ஆவது சுதந்திர தின விழாவில் தமிழ் மொழியில் தேசிய கீதம் இசைக்கப்பட்டமைக்கு எதிராக கருத்துக்கள் வெளியிடப்படுகின்றமை தொடர்பில் வினவிய போதே அமைச்சர் கேசரி இணையத்தளத்திற்கு மேற்கண்டவாறு தெரிவித்தார்.