விடுதலைப்புலிகளின் காலத்தில் பெண்கள் மீதான துஷ்பிரயோகங்கள், அச்சுறுத்தல்கள் தொடர்பில் நாங்கள் அறிந்திருக்கவில்லை. கிழக்குடன் ஒப்பிடும்போது பெண்களுக்கு எதிரான வன்முறைகளும் துஷ்பிரயோகங்களும் வடக்கில் அதிகரித்த நிலையில் இருக்கின்றது. அதனால் தான் பெண்கள் கொள்கையின் அடிப்படையில் அரசியலுக்கு வரவேண்டும் என கூறிவருகின்றோமென வடமாகாண மகளிர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன் தெரிவித்தார்.

அனந்தி சசிதரனின் பன்முகப்படுத்தப்பட்ட நிதியொதுக்கீட்டில் கிழக்கு பல்கலைக்கழகத்தில் கல்வி பயிலும் வடமாகாணத்தை சேர்ந்த மாணவர்களுக்கு “டெப்” வழங்கும் நிகழ்வு இன்று புதன்கிழமை காலை நடைபெற்றது.

இதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே வடமாகாண மகளிர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஆனால் இன்று கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ளது. கிழக்குடன் ஒப்பிடும்போது பெண்களுக்கு எதிரான வன்முறைகளும் துஷ்பிரயோகங்களும் வடக்கில் அதிகரித்த நிலையில் இருக்கின்றது. பெண்கள் தான் பெண்களின் பிரச்சினைகளை பேசவேண்டியவர்களாக இருக்கின்றனர். அதனால்தான் பெண்கள் கொள்கையின் அடிப்படையில் அரசியலுக்கு வரவேண்டும்.

வடமாகாணசபையில் 2018 ஆம் ஆண்டு நிதியொதுக்கீட்டில் கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களுக்கும் நிதியொதுக்கீடுசெய்யப்படவேண்டும் என்ற கோரிக்கை கொள்கையளவில் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

யுத்தம் காரணமாக தமிழர்கள் கல்வியையும் பொருளாதாரத்தினையும் இழந்துள்ளனர். ஒரு பகுதியில் பொருளாதாரத்தை வளர்க்கும் அதேவேளையில் கல்வியில் அக்கறைசெலுத்தவேண்டிய தேவையும் இருக்கின்றது.

பல்கலைக்கழகத்திற்காக ஒரு மாகாணத்தில் இருந்து இன்னுமொரு மாகாணத்திற்கு செல்லும்போது அவர்களின் தேவை அதிகரித்து வாழ்க்கை செலவுக்கு ஈடுகொடுக்கமுடியாத நிலையில் மாணவர்கள் இருக்கின்றனர்.

கடந்த காலத்தில் இவ்வாறான மாணவர்களின் பிரச்சினைகள் தெரியப்படுத்தப்படாத காரணத்தினால் பன்முகப்படுத்தப்பட்ட நிதியில் இவர்களுக்கான உதவிகளை செய்யமுடியாத நிலையிருந்தது. எனினும் நாங்கள் பதவியில் இருக்கும் வரையில் எங்களால் முடிந்த உதவிகளை வழங்குவோம்.

வடக்கு மாகாணத்தில் எவ்வாறு இவ்வாறான செயற்றிட்டங்களை முன்னெடுக்க முனைகின்றோமோ அவ்வாறு கிழக்கில் இருக்கின்ற மாணவர்களின் கல்வியை கருத்தில்கொண்டு கிழக்கில் இருக்கின்ற அரசியல்வாதிகள் முன்னிற்கவேண்டும்’.

தங்களால் தெரிவுசெய்யப்பட்ட மக்கள் பிரதிநிதிகளினால் தங்களது எதிர்கால சந்ததியினரின் கல்விக்கான ஒத்துழைப்பினையும் உதவியையும் வழங்கமுடியாதவர்களாக மௌனம் காத்துக்கொண்டிருக்கின்ற நிலைமை கவலைக்குரியது.

மாணவர்கள் மத்தியில் இருந்து மாணவர்களின் நலன்கருதிய அரசியல் தலைமைகள் உருவாகவேண்டும். அதிலும் பெண்கள் அரசியலுக்கு வரவேண்டும். வடமாகாண சபையில் 38 உறுப்பினர்களில் நான் ஒருவர் மட்டுமே பெண் உறுப்பினராக இருக்கின்றேன். 52வீதமான பெண்கள் இருக்கின்ற இலங்கையில் 1.8 வீதமான பெண்கள் மட்டுமே உள்ளுராட்சிமன்றத்தில் உள்ளனர். 2.8வீதமான பெண்களே பாராளுமன்றத்தில் உள்ளனர்.

யுத்தம் வித்தியாசமான பிரச்சினையொன்றை பெண்கள் மத்தியில் உருவாக்கியுள்ளது. பெண்கள் தலைமைத்துவம் தாங்கும் குடும்பங்கள் அதிகளவாக உள்ள நிலையில் அவர்கள் தங்களது குடும்பங்களை நிர்வகிப்பதில் பல சிரமங்களை எதிர்கொள்கின்றனர்.

விடுதலைப்புலிகள் காலத்தில் பெண்களுக்கு துஷ்பிரயோகங்கள், அச்சுறுத்தல்கள் என்பது தொடர்பில் நாங்கள் அறிந்திருக்கவில்லை. ஆனால் இன்று கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ளது. கிழக்குடன் ஒப்பிடும்போது பெண்களுக்கு எதிரான வன்முறைகளும் துஷ்பிரயோகங்களும் வடக்கில் அதிகரித்த நிலையில் இருக்கின்றது. பெண்கள்தான் பெண்களின் பிரச்சினைகளை பேசவேண்டியவர்களாக இருக்கின்றனர். அதனால்தான் பெண்கள் கொள்கையின் அடிப்படையில் அரசியலுக்கு வரவேண்டும் என்று கூறிவருகின்றோம்.

இலங்கை அரசாங்கம் ஏற்றுக்கொள்ளாவிட்டாலும் ஏற்றுக்கொண்டாலும் நாங்கள் ஒரு தேசமாகும். அந்த கொள்கையின் அடிப்படையில் பெண்கள் அரசியலுக்கு வரவேண்டும். பெண்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்காக நாங்கள் நீதிகோரும் பயணத்தினை மேற்கொண்டிருக்கும் நிலையில் நாங்கள் அபிவிருத்தியையும் கல்வி மேம்பாட்டையும் கவனத்தில்கொள்ளவேண்டிய அவசியம் உள்ளது என அவர் மேலும் தெரிவித்தார்.

கிழக்கு பல்கலைக்கழகத்தின் மட்டக்களப்பு கல்லடி சுவாமி விபுலானந்தா அழகியல் கற்கைகள் நிறுவகத்தின் மண்டபத்தில் இந்த நிகழ்வு நடைபெற்றது.

இந்த நிகழ்வில் கிழக்கு பல்கலைக்கழகத்தின் மனித வள இணைப்பாளர், மாணவர்கள், கல்விசாரா ஊழியர்கள் என பெருமளவானோர் கலந்துகொண்டனர்.

இதன்போது கிழக்கு பல்கலைக்கழகத்தில் கல்வி பயிலும் வடமாகாணத்தை சேர்ந்த 20 மாணவர்களுக்கு டெப்  வழங்கிவைக்கப்பட்டன. இதற்காக அமைச்சரின் பன்முகப்படுத்தப்பட்ட நிதியில் இருந்து மூன்று இலட்சம் ரூபா ஒதுக்கீடுசெய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.