இராணுவத்திற்கு சொந்தமான ரீ56 ரக துப்பாக்கியை பயன்படுத்தி கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்ட நபருக்கு வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி பாலேந்திரன் சசிமகேந்திரன் ஆயுட்கால  சிறைத்தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளார்.

வவுனியா - மதவுவைத்த குளத்தைச் சேர்ந்த 32 வயதுடைய நபர் ஒருவர் 2009 ஆம் ஆண்டு யூன் மாதம் 30ஆம் திகதி இலங்கை இராணுவப் படைக்குச் சொந்தமான ரீ 56 வகையைச் சேர்ந்த துப்பாக்கி ஒன்றையும், 15 துப்பாக்கி ரவைகளையும், 4 துப்பாக்கி குண்டு கவசங்களையும் களவாடி பின்னர் அவற்றைப் பயன்படுத்தி வவுனியா மற்றும் யாழ்ப்பாணம் பகுதிகளில் பல்வேறு குற்றச் செயல்களை செய்தமை தொடர்பில் வவுனியா பொலிஸ் நிலையத்தில் 2010ஆம் ஆண்டுக் காலப்பகுதியில் பல முறைப்பாடுகள் கிடைத்திருந்தது.

இது தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட வவுனியா பொலிசார் வவுனியா மதவுவைத்தகுளம் பகுதியைச் சேர்ந்த 32 வயதுடைய நபர் ஒருவரை கைது செய்தனர்.

விசாரணைகளின் போது குறித்த நபர் வவுனியா பட்டக்காடு குளப்பகுதியில்  பல்வேறு குற்றச் செயல்களுக்கு பயன்படுத்தியதாக கருதப்பட்ட துப்பாக்கி மற்றும் துப்பாக்கி ரவைகளை மறைத்து வைக்கப்பட்டிருந்தது தெரியவந்திருந்தது. இதனையடுத்து அவை கடந்த 2010ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 24ஆம் திகதி வவுனியா பொலிசாரால் மீட்கப்பட்டது.

குறித்த குற்றச் செயல் தொடர்பில் வவுனியா நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டு வழக்கு விசாரணைகள் இடம்பெற்று வந்த நிலையில் கடந்த ஏப்ரல் மாதம்  28 ஆம் திகதி சட்டமா அதிபரினால் குறித்த நபருக்கு எதிராக இரு குற்றச்சாட்டுக்கள் அடங்கிய குற்றபகிர்வுப்  பத்திரம் வவுனியா மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

முதலாவது குற்றச்சாட்டாக இராணுவத்திற்கு சொந்தமான ரீ 56 துப்பாக்கியை உடமையில் வைத்திருந்தமை மற்றும் இரண்டாவது குற்றச்சாட்டாக 15 துப்பாக்கி ரவைகளை உடமையில் வைத்திருந்தமை என்பன குறிப்பிடப்பிடப்பட்டிருந்தது.

குறித்த குற்றபகிர்வு பத்திரம் தொடர்பில் வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி பாலேந்திரன் சசிமகேந்திரன் முன்னிலையில் வழக்கு விசாரணைகள், விளக்கங்கள் இடம்பெற்று நேற்றைய தினம் தீர்ப்புக்காக திகதியிடப்பட்டிருந்தது.  இதனடிப்படையில் இராணுவத்திற்கு சொந்தமான ரீ56 ரக துப்பாக்கியை வைத்திருந்த குற்றச்சாட்டுக்கு ஆயுள் கால சிறைத் தண்டனையும், இரண்டாவது குற்றச்சாட்டான துப்பாக்கி ரவைகளை உடமையில் வைத்திருந்தமைக்கு ஒரு வருட கடூழிய சிறைத்தண்டனையும் வழங்கி மேல் நீதிமன்ற நீதிபதி பாலேந்திரன் சசிமகேந்திரன் தீர்ப்பளித்துள்ளார்.

மேலும் குறித்த நபர் 2009 ஆம் ஆண்டு வவுனியா நாகர்  இலுபைக்குளம் பகுதியில் வீடு புகுந்து ஆயுத முனையில் தங்க நகைகளை கொள்ளையடித்த குற்றத்திற்காக 10 வருடத்திற்கு ஒத்திவைக்கப்பட்ட 2 வருட கடூழிய சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டது.

2010 ஆம் ஆண்டு கணேசபுரம் பகுதியில் வீடு புகுந்து 175,000 பெறுமதியான பணம் மற்றும் பொருட்களை கொள்ளையடித்த குற்றத்திற்காக 25 வருட கடூழிய சிறைத்தண்டனையும் வவுனியா மேல் நீதிமன்றத்தால் விதிக்கப்பட்டுள்ளது.