மியன்மாரில்    சீனாவின் பொருளாதார நலன்களும் ரொஹிங்யா நெருக்கடியும் 

Published By: Priyatharshan

28 Nov, 2017 | 05:12 PM
image

சீனா ஏனைய நாடுகளின் உள்நாட்டு நெருக்கடிகளில் நேரடியாக தலையீடு செய்யாமல் இருந்து வந்த இது கால வரையான போக்கை இப்போது கைவிட ஆரம்பித்திருக்கின்றதோ என்ற கேள்வியை மியன்மார் ரொஹிங்யா நெருக்கடிக்கு அது முன்வைத்திருக்கும் தீர்வுத் திட்டம் தவிர்க்க முடியாமல் எழுப்புகிறது. 

ரொஹிங்யா நெருக்கடியைத்  தணிப்பதற்கு  சீனா மூன்று கட்டத் திட்டம் ஒன்றை முன்வைத்தது. மியன்மாரின் ராக்கைன் மாநிலத்தில் யுத்த நிறுத்தமொன்றை கொண்டு வருவது முதலாவது கட்டம். இது அங்கு இடம் பெறுகின்ற வன்முறைகளை முடிவுக்கு கொண்டு வருவதை நோக்கமாகக் கொண்டது. அகதிகள்  பிரச்சினை தொடர்பில் மியன்மாரும் பங்களாதேஷும் பேச்சு வார்த்தைகளை நடத்துவது இரண்டாவது கட்டம். ராக்கைன் மாநிலத்தின் பொருளாதார அபிவிருத்திக்கு உதவுவதற்கு சர்வதேச சமூகத்திடம் வேண்டுகோள் விடுப்பது மூன்றாவது கட்டம். 

பங்களாதேஷும் மியன்மாரும் சீனாவின் திட்டத்தை ஏற்றுக் கொண்டுவிட்டன. ஆனால் முதலாவது கட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு முன்னதாக இரண்டாவது கட்டத்தை நடைமுறைப்படுத்த  தொடங்குவதை சாத்தியமாக்கக் கூடிய அறிகுறிகளே தென்படுகின்றன. 

கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் ராக்கைன் மாநிலத்தில் மேற்கொள்ளப்பட்ட இராணுவ நடவடிக்கைகளின் விளைவாக அங்கிருந்து  பாதுகாப்புத் தேடி பங்களாதேஷுக்கு ஓடிய சுமார் 6 இலட்சம் ரொஹிங்யா முஸ்லிம் அகதிகளையும் நாட்டுக்கு திருப்பியழைப்பதற்கான ஏற்பாடுகள் தொடர்பில் பங்களாதேஷும் மியன்மாரும்  புரிந்துணர்வு உடன்படிக்கை ஒன்றை செய்து  கொண்டுள்ளன.  மியன்மாரின் தலைநகர் நைப்பியிதோவில் வைத்து கடந்த வெள்ளிக்கிமை அந் நாட்டின் அரசாங்க கட்சியின் தலைவியான ஆங் சாங் சூகியும் பங்களாதேஷ் வெளியுறவு அமைச்சர் ஏ.எச்.முஹமட் அலியும் உடன்படிக்கையில்   கைச்சாத்திட்டார்கள். 

இதற்கு முன்னதாக சீனாவின்  வெளியுறவு  அமைச்சர் வாங் யி பங்களாதேஷுக்கும்    மியன்மாருக்கும் விஜயங்களை மேற்கொண்டு இரு நாடுகளினதும்  அரசாங்கங்களுடன் பேச்சு வார்த்தைகளை  நடத்தி சீனாவின் மூன்று கட்ட திட்டத்துக்கும் இணக்கத்தைப் பெற்றுக் கொண்டார். சீனாவின் திட்டம் சரியானதொரு திசையிலானது என்பதே சர்வதேச சமூகத்தின் பொதுவான அபிப்பிராயமாக இருக்கின்ற போதிலும் சாமதானத்துக்கான பாதை தடைகளையும் சவால்களையும் நிறையவே கொண்டது என்பதில் சந்தேகமில்லை. 

புரிந்துணர்வு உடன்படிக்கையின் பிரகாரம் பங்களாதேஷில் இருந்து ரொஹிங்யா அகதிகளை திருப்பியழைப்பதற்கான     செயன்முறைகள் இரு மாதங்களில் ஆரம்பிக்கப்படுமென்று எதிர்பார்க்கப்படுவதாக இராஜதந்திர  வட்டாரங்கள் மூலம் அறியக்கூடியதாக இருக்கிறது. பங்களாதேஷில் உள்ள ரொஹிங்யா அகதிகள் தங்களது தனிப்பட்ட விபரங்களை நிரப்பி அனுப்புவதற்கான பதிவு விண்ணப்படிவங்களை மியன்மார் அரசாங்கம் டாக்காவுக்கு அனுப்பி வைத்திருக்கிறது. அந்த படிவங்கள் பூர்த்தி செய்யப்பட்டு பங்களாதேஷ் அரசாங்கம் அவற்றை திருப்பியனுப்பிய பிறகு சாத்தியமானளவு விரைவாக அகதிகளை திருப்பிழயழைக்க தயாராக இருப்பதாக மியன்மார் அரசாங்க தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ரொஹிங்யாக்கள் மேலும் அகதிகளாக வெளியேறுவதைத்  தடுப்பதற்கும் ராக்கைனில் பாதிக்கப்பட்டிருக்கும் மக்களுக்கு உடனடி நிவாரணத்தை வழங்குவதற்கும் வசதியாக யுத்த நிறுத்தம் ஒன்றை பிரகடனம் செய்ய வேண்டும் என்பதே பெய்ஜிங்கின் அணுகுமுறையின் முதல் கட்டமாகும். ஆனால் இது இன்னமும் சாத்தியப்படவில்லை. 

யுத்த நிறுத்தமானது பிரகடனப்படுத்தப்படும் பட்சத்தில் அதை மதித்து மியன்மார் இராணுவமும் பிரதான றொஹிங்யா தீவிரவாதக் குழுவான அராகன்  ரொஹிங்யா விடுதலை இராணுவமும் வன்முறையை நிறுத்திக் கொள்வதாக இருந்தாலும் கூட யுத்த நிறுத்தத்தை மதிக்கத்  தயாரில்லாத வேறு பிரிவுகள் இருக்கக் கூடும். றொஹிங்யாக்களுக்கு எதிரான வன்முறைகளில் ராக்கைன் பௌத்த பாதுகாப்பு குழுக்கள் முக்கிய பங்கு வகித்து வருகின்றன. ரொஹிங்யாக்களை அச்சுறுத்துவதையும் தாக்குவதையும் இந்த குழுக்கள்  நிறுத்துமா? பிரகடனப்படுத்தக் கூடிய யுத்த நிறுத்த உடன்படிக்கை ஒன்றுக்குள் இந்த பௌத்த குழுக்களையும் உள்ளடக்கவேண்டியது முக்கியமானதாகும்.

ரொஹிங்யா தீவிரவாதிகளைக் கட்டுப்படுத்துவதற்கென்று கூறிக் கொண்டு மியன்மார் இராணுவம் ராக்கைன் மாநிலத்தில் நடவடிக்கைகளை நான்கு மாதங்களுக்கு முன்பு தீவிரப்படுத்தியது. அப்பாவி றொஹிங்யா முஸ்லிம் குடிமக்களே பெரிதும் பாதிக்கப்பட்டு அயல் நாடான பங்களாதேசுக்கு தப்பியோடிக் கொண்டிருக்கிறார்கள். சுமார் 6 இலட்சம் பேர்  என்று மதிப்பிடப்பட்டிருக்கின்ற றொஹிங்யா அகதிகளை தங்க வைத்து பராமரிப்பதென்பது பங்களாதேஷ் போன்ற ஒரு நாட்டுக்கு சுலபமான காரியம் அல்ல. சர்வதேச மனிதாபிமான உதவி  நிறுவனங்களும் அகதிகளுக்கு நிவாரண உதவிகளை வழங்கும் செயற்பாடுகளை முன்னெடுத்திருக்கின்ற போதிலும் நிலைவரம் பரிதாபகரமானதாகவே இருக்கின்றது. 

சீனா ஏனைய நாடுகளின் உள்நாட்டு நெருக்கடிகளில் நேரடியாக தலையீடு செய்வதில்லை என்பது ஒரு வரலாற்று ரீதியான   போக்காக   இருந்து வந்திருக்கின்றது. ஆனால் ரொஹிங்யாக்களின் நெருக்கடியில் சீனா தன் முனைப்புடன் செயற்பட்டிருப்பதைக் காணக் கூடியதாக இருக்கிறது.  அதற்கு அடிப்படைக்காரணம் இந்த நெருக்கடியில்   சீனாவின் சொந்த நலன்கள் சம்பந்தப்பட்டிருக்கின்றன என்பதேயாகும். மற்றும்படி றொஹிங்யாக்களின் அவல நிலை கண்டு மனிதாபிமான உணர்வுடன்  பெய்ஜிங் தலையிட்டிருக்கின்றது. என்று கூறுவதற்கில்லை. 

பெய்ஜிங்; பங்களாதேஷுடனும் மியன்மாருடனும் நல்ல உறவுகளை கொண்டிருக்கிறது. மியன்மாரின் ராக்கைன் மாநிலம் சீனாவின் மண்டலமும்  பாதையும் (Belt and Road Initiative) என்ற பல யூரேசிய நாடுகளை உள்ளடக்கிய பிரமாண்டமான செயற்திட்டத்தின் முக்கியமான ஒரு இணைப்பாக அமைகிறது. ராக்கைனில் சீனா 730 கோடி டொலர்கள் செலவில் ஆழ் கடல் துறைமுகம் ஒன்றை நிர்மாணித்துக் கொண்டிருக்கிறது. அத்துடன் ராக்கைன் கரையோரத்தையும் யூனானையும் இணைக்கும் எண்ணெய் மற்றும்  வாயு குழாய் வழியையும் நிர்மாணிப்பதற்கு 245 கோடி டொலர்களை சீனா முதலீடு செய்திருக்கிறது. 

ராக்கைன் நெருக்கடி மேலும் நீண்டகாலத்துக்கு தொடருமாக இருந்தால் அது சீனாவின் பொருளாதார நலன்களுக்கு பாதிப்பாக அமையும்  என்பதால்  மியன்மார் மீது பெய்ஜிங் நெருக்கடியைப் பிரயோகித்து   அதன் மூன்று கட்ட சமாதானத் திட்டத்துக்கு இணங்க வைத்திருக்கிறது. றொஹிங்யா முஸ்லிம்களைத் திருப்பியழைக்கும் திட்டம் தொடர்பான புரிந்துணர்வு உடன்படிக்கை  சீனாவின் நெருக்குதல் இராஜதந்திரோபாயம் பயன் தந்திருக்கின்றது என்பதை வெளிக்காட்டுகின்றது. 

சீனாவைப் பொறுத்தவரை றொஹிங்யா நெருக்கடியை முடிவுக்கு கொண்டு வருவதற்கான அதன் திட்டம் இராணுவ - பொருளாதார அணுகுமுறையொன்றின் அடிப்படையிலானது. நெருக்கடிக்கு வறுமை பிரதான காரணம் என்று சீனா கருதுகின்றது போல தெரிகிறது.  மியன்மார் அரசாங்கத்தினால் றொஹிங்யாக்களுக்கு இழைக்கப்பட்டு வந்திருக்கும் பாரபட்சமும் ஒடுக்கு முறையுமே அடிப்படையில் அவர்கள் மத்தியிலான கடும் வறுமைக்குக் காரணமாகும்.  வேலை வாய்ப்புக்களை வழங்குவதன் முலமோ அல்லது பொருளாதார அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுப்பதன் மூலமோ  மாத்திரம் றொஹிங்யாக்களின் அடிப்படைப் பிரச்சினையைத்    தீர்த்து விட முடியாது என்பதே யதார்த்தமாகும். 

றொஹிங்யாக்கள் நாடற்றவர்களாக இருக்கிறார்கள், அந்த நிலை மாற்றப்பட வேண்டும்.  மியன்மாரின்   பிரஜைகளாக இருப்பதற்கான உரிமைகள் அவர்களுக்கு இருக்கிறது.   இது ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும். பிரஜாவுரிமை நிராகரிக்கப்படும் வரை பிரச்சினை தொடரும். தற்போதைய நெருக்கடி வெறுமனே அகதிகளுடன் சம்பந்தப்பட்டதல்ல. றொஹிங்யாக்களின் உரிமைகள் மறுக்கப்பட்டு வருவதன் விளைவானதே பிரச்சினை.

ராக்கைன் மாநிலத்துக்கு அமைதியை திரும்ப கொண்டு வர மியன்மாரில் றொஹிங்யாக்கள் அனுபவித்து வருகின்ற திட்டமிட்ட வகையிலான பாரபட்சமும் ஒடுக்கு முறையும் முடிவுக்கு வர வேண்டும். அமைதியையும் உறுதிப்பாட்டையும் கொண்டு வருவதற்கான சீனாவின் திட்டத்தின் நோக்கம் றொஹிங்யாக்களின் உரிமைகள் -  நலன்களுடன் சம்பந்தப்பட்டதல்ல, மாறாக ராக்கைனில்; அதன் முதலீடுகளை பாதுகாப்பதேயாகும்.

வீரகேசரி இணையத்தள ஆய்வுத்தளம்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இந்தியப் பெருங்கடலில் 'சீனா - குவாட்'...

2024-04-18 10:36:33
news-image

'ஆரம்பிக்கலாமா?' : தமிழை கையிலெடுத்துள்ள பிரதமர்...

2024-04-17 19:36:36
news-image

சர்வதேச நீதிமன்றத்தில் ஆர்மேனியா - அஸர்பைஜான்...

2024-04-17 19:37:33
news-image

சிங்களவர்களாக ஒருங்கிணையும் இந்தியத் தமிழர் –...

2024-04-17 18:00:59
news-image

பிரித்தானியாவில் ஆளுங்கட்சி தோல்வி? சொந்த தொகுதியில்...

2024-04-17 11:04:13
news-image

பரந்த கோட்பாடுகளில் இருந்து நடைமுறையில் பிரச்சினைகள்...

2024-04-16 16:00:03
news-image

ஈரானின் அதிரடி தாக்குதல் ; இஸ்ரேல்...

2024-04-16 10:56:59
news-image

ஜனாதிபதி தேர்தலில் அரசியல் கணக்குகள்

2024-04-16 01:48:16
news-image

ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தேசிய கட்சியாக...

2024-04-15 19:01:13
news-image

மறுமலர்ச்சியை ஏற்படுத்த வணிக மறுமலர்ச்சி அலகு

2024-04-15 18:55:41
news-image

ரோஹிங்யா முஸ்லிம்களின் உதவியை நாடும் மியன்மார்...

2024-04-15 18:51:43
news-image

சிறிய அயல் நாடுகளின் சோதனைக் காலம்?

2024-04-15 18:49:22