தென்கொரிய ஜனாதிபதி மூன் ஜெயினின் விசேட அழைப்பை ஏற்று மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு தென்கொரியா சென்ற ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று அதிகாலை சியோல் நகரிலுள்ள இன்சியோன் சர்வதேச விமான நிலையத்தை சென்றடைந்தார்.

ஜனாதிபதியை கோலாகலமாக வரவேற்பதற்கு தென்கொரிய அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருந்ததுடன், அந்நாட்டின் பிரதி வெளிநாட்டு அமைச்சர் சோ-யுன் தேசிய பாதுகாப்பு தலைவர் சுங் ஈ-யொங் ஆகியோர் உள்ளிட்ட அந்நாட்டின் சிரேஷ்ட பிரதிநிதிகள் இவ்வரவேற்பு நிகழ்வில் கலந்து கொண்டனர்.

அதனைத் தொடர்ந்து ஜனாதிபதி தங்கியிருக்கும் சியோல் நகரின் ஹோட்டலிலும் ஜனாதிபதிக்கு விசேட வரவேற்பு நிகழ்வொன்று தென்கொரியாவுக்கான இலங்கை தூதரக அதிகாரிகளினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இலங்கைக்கும் தென்கொரியாவுக்குமிடையே இராஜதந்திர உறவுகள் ஏற்பட்டுத்தப்பட்டு 40 வருடங்கள் நிறைவடைவதை முன்னிட்டு ஜனாதிபதியின் இந்த விஜயம் இடம்பெறுவதுடன், இரு நாடுகளுக்குமிடையிலான உறவுகளை அனைத்து துறைகளிலும் மேலும் பலப்படுத்துவது இந்த விஜயத்தின் நோக்கமாகும்.

இலங்கைக்கும் தென்கொரியாவுக்குமிடையில் சிறந்த உறவுகள் இருந்துவரும் நிலையில் ஜனாதிபதியின் இவ்விஜயம் முக்கியத்துவம் வாய்ந்தது என்று தென்கொரிய பத்திரிகைகள் இன்று செய்தி வெளியிட்டுள்ளன. 

தென்கொரிய தீபகற்பத்தில் ஏற்பட்டிருந்த கொந்தளிப்பான சூழலில் இலங்கை வழங்கிய ஒத்துழைப்புக்கும் இவை நன்றி தெரிவிக்கப்பட்டிருந்தன.

ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவுக்கும் தென்கொரிய ஜனாதிபதி மூன் ஜேயினுக்கும் இடையிலான உத்தியோகபூர்வ சந்திப்பு நாளை இடம்பெறவுள்ளதுடன், இரு நாடுகளுக்குமிடையிலான கூட்டுறவை மேம்படுத்தும் உடன்படிக்கைகளும் கைச்சாத்திடப்படவுள்ளன.