மன்னார் மாவட்டத்தில் உள்ள இரண்டு மாவீரர் துயிலும் இல்லங்களிலும் உணர்வு பூர்வமாக இன்று திங்கட்கிழமை மாலை மாவீரர் தினம் நினைவு கூரப்பட்டது.

மன்னார் மாவட்ட மாவீரர் நினைவேந்தல்  ஏற்பாட்டுக் குழுவின் தலைவர் வி.எஸ்.சிவகரன் தலைமையில் இடம்பெற்ற குறித்த நினைவேந்தல் நிகழ்வில் பல்லாயிரக்கணக்கானவர்கள் கலந்துகொண்டு மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினர்.

மன்னார் மாவட்டம் ஆட்காட்டிவெளி மாவீரர் துயிலும் இல்லத்திலும்,பெரிய பண்டிவிரிச்சான் மாவீரர் துயிலும் இல்லத்திலும் மாவீரர் தின நினைவேந்தல்கள் மிக உணர்வு பூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது.

ஆட்காட்டிவெளி மாவீரர் துயிலும் இல்லத்தில் இடம்பெற்ற மாவீரர் தின நினைவேந்தல்களின் போது பொதுச் சுடரினை மூன்று மாவீரர்களின் தந்தையான எஸ்.ஞானப்பிரகாசம் ராசு ஏற்றி வைத்தார்.

அதனைத்தொடர்ந்து மாவீரர்களின் உறவினர்கள் சுடர் ஏற்றி,மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

பல ஆயிரக்கணக்கானவர்கள் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினர். குறிப்பாக மன்னார் மாவட்டத்தில் மட்டுமின்றி வேறு மாவட்டங்களில் இருந்தும் மக்கள் வருகை தந்து மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினர்.

மேலும் அருட்தந்தையர்கள், அருட்சகோதரிகள் , தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன், வடமாகாண அமைச்சர்களான வைத்திய கலாநிதி ஜீ.குணசீலன், அனந்தி சசிதரன், வடக்கு மாகாணசபை உறுப்பினர் சட்டத்தரணி எஸ்.பிரிமூஸ் சிறாய்வா, உட்பட பொது அமைப்பினர், மனித உரிமைகள் செயற்பாட்டாளர்கள் பொது மக்கள் என பலர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.

பெரிய பண்டிவிரிச்சான் மாவீரர் துயிலும் இல்லத்தில் பொதுச் சுடரினை கரும்புலி மாவீரரின் தாயர் திருமதி லூசியா ஏற்றி வைத்தமை குறிப்பிடத்தக்கது.