நாஸாவால் ஒழுங்கு செய்யப்பட்ட போட்டியில், செயற்கை நுண்ணறிவு கொண்ட ரோபோ இயக்கிய ‘ட்ரோன்’, விமானி ஒருவர் செலுத்திய ட்ரோனிடம் தோல்வியடைந்துள்ளது. எனினும் போட்டி முழுவதும் ட்ரோனை ரோபோ சீராக வழிநடத்திச் செலுத்தியதாக விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.

சாதாரண பறத்தலாக இல்லாமல் தடைகளுடன் கூடிய பறத்தல் போட்டியிலேயே ரோபோ தனது ட்ரோனை சீராக இயக்கியிருக்கிறது.

“நான் செலுத்திய ட்ரோன் வெற்றிபெற்றது உண்மையே. ஆனால் தடைகள் வரும்போது மன உளைச்சல் மற்றும் அசதி என்பனவற்றுடனேயே செலுத்தி வேண்டியிருந்தது. நீண்ட தூரம் இவ்வாறு பறப்பது ஆபத்தானது. 

“ஆனால், ரோபோ செலுத்திய ட்ரோன் தடைகள் இல்லாத இடங்களில் அதீத வேகத்துடனும் தடைகள் இருந்த இடத்தில் வேகம் குறைவாகவும் பறந்ததன் மூலம் ரோபோ மூலம் இயக்கப்படும் விமானம் விபத்துக்குள்ளாகும் வாய்ப்புகள் குறைவு என்பது நிரூபணமாகியுள்ளது” என்று, ட்ரோனை இயக்கிய கென் லூ என்ற விமானி தெரிவித்துள்ளார்.

லூ செலுத்திய ட்ரோனுக்கும் ரோபோ செலுத்திய ட்ரோனுக்கும் இடையிலான வித்தியாசம் வெறும் இரண்டு நொடிகள் மட்டுமே! ஆனால், ரோபோ செலுத்திய விமானம் மிகுந்த கட்டுப்பாட்டுடன் இயங்கியதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.