ஊழல் மோசடிக்கு எதிராக தீர்மானங்களை மேற்கொள்கின்றபோது அதற்கெதிராக என்மீது குற்றம் சுமத்தப்படுமானால்  பதவியை துறந்து மக்களுடன் இணைந்து அப்போராட்டத்தை முன்னெடுக்க தயாராக இருப் பதாக ஜனாதிபதி  மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அரசாங்கம் தவறு செய்தமையினால் 2015 ஆம் ஆண்டில் இடம்பெற்ற தேர்தலில்  சுதந்திர கட்சி வேட்பாளர்கள் தோல்வியடைந்தனர். ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்பினர்கள் அரசாங்கத்திற்குள் இருந்து கொண்ட அதே தவறுகளை செய்வார்களாயின் மக்கள் அதனை அனுமதிக்க மாட்டார்கள் என்றும் அவர் சுட்டிக்காட்டினார். 

நிகரவெட்டியவில் நேற்று இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனை தெரிவித்தார். அவர் தொடர்ந்தும் கூறுகையில் ,

நிலையானதும் நேர்மையானதுமான திட்டங்களை முன்னெடுப்பதற்காகவே மக்கள் மோசடிகளினால் நிறைந்த ஆட்சியை விரட்டியடித்து புதிய அரசாங்கத்தை உருவாக்கினார்கள். மக்களின் இந்த எதிர்பார்ப்பை நிறைவேற்றுவதற்கு அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட தயாராக வேண்டும். பிரிந்து செல்வது இலகுவான விடயமாகும். ஆனால் மீண்டும் இணைந்து நம்பிக்கையை கட்டியெழுப்புதல் என்பது மிகவும் கடினமான விடயமாகும். 

அரசியலில் சிறுபிள்ளைதனமாக அல்லாது புத்திசாலித்தனமான அரசியல்வாதியாக சிந்தித்து பிளவுகளை தவிர்த்து நாட்டிற்காக ஒன்றுப்பட்டு செயற்பட வேண்டியது அனைவரினதும் கடமையாகும். அரசியல் அதிகாரங்களுக்காவும் தனிப்பட்டவர்களின் நிகழ்ச்சி நிரல்களுக்காகவும் செயற்படாது நாட்டினதும் நாட்டு மக்களினதும் நலன்களை கருத்தில் கொண்டு செயற்பட வேண்டும்.  

அதே போன்று ஊழல் , மோசடிகளுக்கு எதிராக தீர்மானங்களை எடுக்கும் போது எனக்கு எதிராக குற்றச்சாட்டுக்கள் முன்னெடுக்கப்படுமாயின் அனைத்து பதவிகளையும் துறந்து பொது மக்களுடன் ஒன்றிணைந்து போராட்டத்தை முன்னெடுப்பேன். தூய்மையானதும் நேர்மையானதுமான அரசியலிலேயே  இதுவரையில் பங்களிப்பு செய்துள்ளேன். நீண்டகால அரசியல் பயணத்தின் அனுபவத்தில் அனைத்து சந்தர்ப்பங்களிலும் பொறுமையுடன் செயற்பட்டுகின்றேன். 

கற்றுக்கொள்வதற்காக அரசியல் செய்ய வில்லை. உள்ளுராட்சிமன்ற தேர்தல் நிலை தொடர்பில் சுதந்திர கட்சிக்கு எதிராக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்றன. ஆனால் தேர்தலை விரைவாக நடாத்த வேண்டும் என்ற நிலைப்பாட்டிலேயே சுதந்திர கட்சியும் உள்ளது. அதற்கு தேவையான அனைத்து பங்களிப்புகளையும் செய்துள்ளோம். 

ஐக்கிய தேசிய கட்சிக்கு பாராளுமன்றத்தில் 47 ஆசனங்கள் இருந்த நிலையிலேயே 19 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை நிறைவேற்றினோம். சுதந்திர கட்சியை தலைமைத்துவமாக கொண்ட ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பில் 142 வாக்குகள் சட்டமூலத்தை நிறைவேற்றி கொள்வதற்கு கிடைக்கப்பெற்றது என்பதை நினைவு கூர விரும்புகின்றேன். 

எனவே சுதந்திர கட்சியை வலுவாக மீண்டும் கட்டியெழுப்ப வேண்டியது தேர்தல் வெற்றிக்காக மாத்திரம் அல்ல. மாறாக நாட்டில் சிறந்த அரசியல் கலாசாரம் ஒன்றை உருவாக்க வேண்டும் என்பதற்காகவும் கட்சியை வலுவாக்க வேண்டும் . நாட்டின் தற்போதைய அபிவிருத்தித் திட்டங்கள் மற்றும் மக்களின் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்காக முன்னெடுக்கப்படும் நிகழ்ச்சித் திட்டங்களுக்காக தனது பணிப்புரையின் பேரில் மாதமொன்றிற்கு ஆறு பில்லியன் ரூபாவுக்கும் அதிகமான தொகையை அரசாங்கம் வரட்சியினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக செலவிடுகின்றது என்றார்.