கொரியாவில் பிறப்பு சதவிகிதம் கடும் சரிவை சந்திப்பதால் இளைஞர்களை திருமண பந்தத்தில் ஊக்குவிக்கும் பொருட்டு அங்குள்ள பல்கலைக்கழகங்கள் காதல், பாலியல் உறவு, உறவுமுறை உள்ளிட்ட பிரிவுகளில் பாடதிட்டத்தை அறிமுகப்படுத்த உள்ளது.

தென் கொரியாவில் பெரும்பாலான இளைஞர்கள் தற்போதைய பொருளாதார நிலையை கணக்கில் கொண்டு திருமணம் செய்து கொள்வதையும் காதலிப்பதையே விட்டு விலகி வருகின்றனர்.

இதனால் பிறப்பு விகிதம் கடும் சரிவை சந்தித்துள்ளது. இதை ஈடு கட்டும் பொருட்டு இளைஞர்களை காதலிக்க தூண்டும் வகையில் பாடதிட்டங்களை உருவாக்க பல்கலைக்கழகங்களுக்கு அந்த நாட்டு அரசு கோரிக்கை வைத்துள்ளது.

இதில் சரியான வாழ்க்கைத் துணையை எவ்வாறு தெரிவு செய்வது, ஆரோக்கியமான குடும்ப உறவை எப்படி பேணுவது உள்ளிட்ட பாடப்பிரிவுகள் இடம்பெறும் என தெரிய வந்துள்ளது.

காதலிப்பது, திருமணம், பாலியல் உறவில் ஈடுபடுவது எவ்வாறு உள்ளிட்டவைகள் குறித்தும் இளைஞர்களுக்கு எடுத்துரைக்கப்படும் எனவும் பிரபல கல்வியாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

இதன் ஒரு பகுதியாக தங்கள் கல்லூரியில் உள்ள 3 இளம்பெண்களை ஒரு மாணவர் டேட்டிங் வைத்துக் கொள்ளலாம் எனவும் அதற்கு போதிய ஆலோசனைகளை உரிய ஆசிரியர்கள் வழங்குவார்கள் எனவும் குறித்த கல்வியாளர் தெரிவித்துள்ளார்.

கடந்த 1970 ஆம் ஆண்டை ஒப்பிடும்போது 2016ஆம் ஆண்டின் திருமண விகிதம் கடும் சரிவை சந்தித்துள்ளதாகவும், கடந்த ஆண்டு 1000 பொதுமக்களில் 5 பேர் மட்டுமே திருமணம் செய்து கொண்டுள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.

பிறப்பு விகிதத்தை ஊக்குவிக்கும் வகையில் தென் கொரிய அரசு £50 பில்லியன் பவுண்ஸ் தொகையை செலவிட்டு வருவது குறிப்பிடத்தக்கது