பொதுவாக ஆண்களோ பெண்களோ அவர்களின் ஆரோக்கியத்தை வெளிப்படுத்தும் உறுப்புகளாக நகம், கண், நாக்கு ஆகியவை இருக்கும். அதைப்போல் தற்போது பெண்களின் உடல் ஆரோக்கியத்தை சொல்லும் அறிகுறியாக மாதவிடாயை கருதலாம். முறையான மாதவிடாயின் அறிகுறிகள் என்றால், மாதவிடாய் ஏற்பட்ட முதல் 3 நாட்கள்  முதல் 7 நாட்கள் வரையில் அதிகளவு மற்றும் திட்டுத்திட்டாக உதிரப் போக்கு இருக்கும். ஆனால், உதிரப் போக்கின் நிறம், அளவு மற்றும் இரண்டு மாதவிடாய்க்கு இடைப்பட்ட நாள் சுழற்சி மாறுபடும் போது, அவை ஆரோக்கியக் குறைபாட்டின் அறிகுறியாக எடுத்துக் கொள்ளலாம்.

மாதவிடாயின் உதிரம் அடர்த்தி, அதிக அளவில் வெளியேறினால், கருப்பையின், 'எண்டோமெட்ரியாசிஸ்' திசுக்கள் கரைந்து வெளியேறுவதாகக் கொள்ளலாம். இதற்கு மருத்துவரின் ஆலோசனை அவசியம். மருந்துகளால் குணப்படுத்த முடியாவிடில், திசுக்களை, 'பயாப்சி' செய்து, நோயின் தீவிரத் தன்மையைக் கண்டறிந்து சிகிச்சை எடுத்துக் கொள்ளவேண்டும்.

கர்ப்பம் தரிக்காமலேயே மாதவிடாய் நிற்பதும், சீரான சுழற்சியின்றி வெளியேறுவதையும், 'செகண்டரி அமனோரியா'  (secondary amenorrhea) என்கிறோம். இதற்கு, ஹோர்மோன் சோதனை செய்த பின்னர் சிகிச்சை பெறவேண்டும். 

சீரற்ற மாதவிடாய் சுழற்சி, மாதவிடாய் ஒரே நாளில் முடிந்து விடுவது, தொடர்ச்சியாக மாதவிடாய் நாட்கள் இருப்பது போன்ற சிக்கல்கள் இருந்தால் அவர்கள் பி.சி.ஓ.டி., எனப்படும் சினைப்பை நீர்க்கட்டிப் பிரச்னையால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் எனலாம். இவர்களும் உடனடியாக மருத்துவர்களை சந்தித்து ஆலோசனைப் பெற்றால் மருந்து, மாத்திரை மற்றும் வாழ்க்கை நடைமுறை மாற்றத்தால் இதனை குணப்படுத்தலாம். சிலருக்கு அதிக வலியோடு மாதவிடாய் நிகழும். அதன் போது அதனை ஸ்கேன் மூலம் பரிசோதித்து சத்திர சிகிச்சை தேவைப்படின் சத்திர சிகிச்சை செய்து அந்த கட்டிகளை அகற்றிக் கொள்ளவேண்டும்.

டொக்டர் வெண்ணிலா

தொகுப்பு அனுஷா.

தகவல் : சென்னை அலுவலகம்