‘அரசியலில் கால் பதிக்கும் அவசரம் ஒன்றும் இல்லை’ என்று ரஜினிகாந்த் தெரிவித்துள்ளது அவரது ரசிகர்களை கடும் அதிருப்திக்கு உள்ளாக்கியுள்ளது.

தமிழக அரசியலை காரசாரமாக விமர்சித்துவந்த கமல்ஹாசன், கடந்த ஏழாம் திகதி தனது பிறந்த நாளன்று, தனிக் கட்சி ஆரம்பிக்கப் போவதாக அறிவித்தார்.

பல வருடங்களாக அரசியலில் இறங்கப் போவதாகக் கூறி வந்த ரஜினிகாந்தும் கடந்த சில மாதங்களாக அரசியலில் அதீத ஈடுபாட்டுடன் இயங்கிவந்தார். குறிப்பாக, தனது அரசியல் பிரவேசம் குறித்து ரசிகர்களுடன் ஆலோசனை செய்யவுள்ளதாகவும் அடிக்கடி அறிவித்து வந்தார்.

இந்த நிலையில், சென்னை விமான நிலையத்தில் ஊடகவியலாளர்களைச் சந்தித்த ரஜினிகாந்த், அரசியலில் கால் பதிக்க வேண்டிய அவசரம் ஒன்றும் உருவாகவில்லை என்று தெரிவித்துள்ளார்.

ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின் தமிழக அரசியலில் தலைமைத்துவத்துக்கான வெற்றிடம் ஏற்பட்டுள்ளது. இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி முதல்வர் பதவியில் அமர ரஜினிகாந்த் எண்ணியிருந்தார். எனினும், எதிர்பாராத விதமாக கமல் அரசியலில் இறங்கியதாலேயே தனது முடிவை ரஜினிகாந்த் மாற்றிக்கொண்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

ரஜினி-கமல் ஜோடி திரையுலகை ஆட்கொண்டது போலவே அரசியலையும் ஆட்கொள்ளும் என்ற பேராவலில் இருந்த ரசிகர்களுக்கு, ரஜினியின் திடீர் மாற்றம் கடும் அதிருப்தியையும் ஏமாற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.