உலகை அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கி இருக்கும் ஸீகா வைரஸ் நுளம்புகளால் மாத்திரம் பரவுவதில்லை என்றும் உடலுறவு மூலமும் தொற்றலாம் என்றும் அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். 

வெனிசுவலாவில் இருந்து ஸீகா வைரஸ் தொற்று உள்ள நபருடன், உடலுறவு வைத்துக்கொண்ட அமெரிக்கர் ஒருவருக்கும் இந்நோய் தொற்றியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

பிரேசில் நாட்டில் இருந்து பரவத்தொடங்கிய இந்த ஸீகா வைரஸ், தற்போது தென் அமெரிக்கா, மத்திய அமெரிக்காவை சேர்ந்த 23 நாடுகளில் வேகமாக பரவி வருகின்றது. 

இந்நோயை குணப்படுத்தும் மருந்துகளோ, தடுப்பு மருந்துகளோ இதுவரை கண்டுபிடிக்கப்படாத நிலையில் உலக சுகாதார தாபனம் அவசர நிலையை பிரகடனப்படுத்தியுள்ளது. 

ஸீகா வைரஸின் தாக்கத்தினால் கருவில் இருக்கும் குழந்தையின் மூளை வளர்ச்சி பாதிக்கப்பட்டு சிறிய தலையுடன் குழந்தை பிறக்கும். 

ஏற்கனவே பிரேசில் நாட்டில் ஆயிரத்துக்கும் அதிகமான குழந்தைகள் ஸிகா நோய் பாதிப்புடன் பிறந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.