இன்று பெற்றோல் மாபியா உள்ளது. இந்த எண்ணெய் வியாபராத்தில் ஒரு குறிப்பிட்ட குழுவொன்று இலாபமீட்டி வருகின்றது. இதை நான் மாற்றி அமைப்பேன். நான் இந்த நாட்காளியில் இருக்கும் வரை மக்களின் பணத்தை களவாட விடமாட்டேன். இதை நான் செய்வது இந்த நிறுவனத்தின் நன்மை கருதியே. நிறுவனத்துக்கு தீமையேற்படும் விடயத்தை நான் ஒருபோதும் செய்யவிடமாட்டேன். நான் இதைச்செய்வதற்கு காரணம் ஊழியர்களின் நன்மை கருதியே என பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி அமைச்சின் அமைச்சர் அர்ஜுன ரணதுங்க தெரிவித்தார். 

பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தில் இன்று இடம்பெற்ற 2018 ஆம் ஆண்டுக்கான கூட்டுஒப்பந்த கைச்சாத்தல் நிகழ்வின் போது கருத்துத் தெரிவிக்கையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இதன் போது அமைச்சர் மேலும் தெரிவிக்கையில்,

நான் அமைச்சராக இருக்கும் வரை இந்நிறுவனத்தை விற்க ஒப்புக்கொள்ளமாடடேன். எனது கொள்கை அரச சொத்துக்களை பாதுகாப்பதே. ஆனால் இதனை இலகுலாக செய்யமுடியாது. நாங்கள் எங்கள் நிறுவனத்தின் செலவுகளை குறைத்து முன்னேறிச்செல்லவேண்டும். நாடு என்ற ரீதியில் இந்த நிறுவனத்தை இலாபமீட்டும் ஒரு நிறுவனமாக மாற்றுவதா அல்லது மக்களுக்கு சேவைசெய்யும் நிறுவனமாக மாற்றுவதா என்ற விடயங்களில் கவனம் செலுத்திவருகின்றோம். 

துறைமுகத்தில் இலாபம் ஈட்டமுடியும். ஆனால் பெற்றோலிய கூட்டுத்தாபனம், மின்சார சபை, நீர் வடிகாலமைப்புச் சபை போன்ற நிறுவனங்களில் இலாபமீட்ட முடியாது. நாங்கள் இலாபம் என்று பார்ப்பது மக்கள் சேவையே. 

பெரும்பாலானவர்களுக்குத் தெரியாது ஊழியர்கள் எதிர்நோக்கும் சிரமங்கள். எரிபொருளில் இருந்து வரும் விஷவாயுக்களால் பெரும்பாலான ஊழியர்களுக்கு நோய்கள் ஏற்பட்டுள்ளது. இதை நாங்கள் மறுக்கக்கூடாது.

நாங்கள் ஊழியர்கள், அதிகாரிகள் என்ற வகையில் உழைக்கவேண்டும். நாங்கள் முடிந்த வரையில் சரிசெய்து தருவோம். நாங்கள் சரிசெய்து இதனை பாதுகாத்துக் கொடுப்போம்.' என அமைச்சர் மேலும் தெரிவித்தார். 

வரலாற்றில் முதன்முறையாக பெற்றோலிய கூட்டுத்தாபனத்தில் சமாதாதன முறையில் எல்லோருடைய ஒருமைப்பாட்டுடன் இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது. 

இந்நிகழ்வு இடம்பெறக் காரணம் அமைச்சர் அர்ஜுன ரணதுங்கவே என பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் முகாமையாளர் பேராசிரியர் பிரசன்ன பெரேரா தெரிவித்தார்.  

எவ்வித பிரச்சினைகளும் இன்றி சமாதான முறையில் முதன்முறையாக இவ் ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டமைக்கு அமைச்சருக்கும், பெற்றோலிய கூட்டுத்தாபனத் தலைவருக்கும் மற்றும் ஏனைய அதிகாரிகளுக்கும் நன்றி தெரிவிப்பதாக தேசிய சேவைகள் சங்கத்தின் தலைவர் ஆனந்த பாலி தெரிவித்தார். 

துறைமுக ஊழியர்களுக்கும் அமைச்சர் சம்பள உயர்வை மேற்கொண்டதைப் போன்று பெற்றோலிய கூட்டுத்தாபன ஊழியர்களுக்கும் உயர் சம்பள அதிகரிப்பை மேற்கொண்டமைக்கு நாங்கள் நன்றி தெரிவிக்கின்றோம் என்று இலங்கை சுதந்திர சேவைகள் சங்கத்தின் தலைவர் ஜயந்த பரேகம தெரிவித்தார். 

இந்த கூட்டுஒப்பந்தம் அமைச்சர் அர்ஜுன ரணதுங்கவின் முன்னிலையில் இடம்பெற்றது. இதில் பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கும் இந்நிறுவனத்தின் ஊழியர் சங்கத்திற்கும் இடையில் இவ்வொப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது.

பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் சார்பாக உயர் அதிகாரி பேராசிரியர் பிரசன்ன பேரேராவும் பெற்றோலிய பொது ஊழியர்கள் சங்கமும், தேசிய சேவைகள் சங்கம், பெற்றோலிய தொழிற்துறை சேவைகள் சங்கம், பெற்றோலிய பொறியியலாளர் சங்கம், இலங்கை பெற்றோலிய தொழிற்சங்கம் ஆகிய சங்கங்களின் தலைவர்கள் இவ்வொப்பந்தத்தில் கைச்சாத்திட்டனர். 

இதில் பதவி உயர்விற்கேற்ப சம்பள அதிகரிப்பை மேற்கொள்வதற்கான நடவடிக்கையை முன்னெடுப்பதற்காக இவ்வொப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது.