நாஸாவின் சர்வதேச விண்வெளி ஆய்வு நிலையத்தை இன்று மாலை - இன்னும் சற்று நேரத்தில் - இலங்கையர்கள் வெறும் கண்களால் பார்க்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சூரியக் கதிர்கள் நம் பார்வையை மறைப்பதால் சர்வதேச விண்வெளி நிலையத்தை வெறும் கண்களால் காண முடியாது.

இந்நிலையில், பூமியின் சுற்றுவட்டப் பாதையில் மிகச் சரியாக இலங்கைக்கு நேர் மேலே இன்று (22) மாலை 6.25 மணிக்கு வரவிருக்கிறது. எனினும் ஐந்து நிமிடங்கள் வரையே இது இலங்கையின் விண் பரப்பில் தெரியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுவரை மனிதனால் நிர்மாணிக்கப்பட்டிருக்கும் மாபெரும் விண்வெளி நிலையம் இது. 109 மீற்றர் நீளமும் 73 மீற்றர் அகலமும் கொண்ட இந்த விண்வெளி நிலையம், 90 நிமிடங்களுக்கு ஒரு முறை பூமியைச் சுற்றி வருகிறது.

பதினெட்டு நாடுகளைச் சேர்ந்த 222 விண்வெளி ஆய்வாளர்கள் இந்நிலையத்தில் தங்கி ஆய்வுப் பணிகளை மேற்கொண்டு வந்துள்ளனர். தற்போது 52வது குழுவாக, ஆறு பேர் இங்கு தங்கி ஆய்வுப் பணிகளைத் தொடர்கின்றனர்.