யாழில் இயங்கும் ஆவாகுழுவுக்கு தகவல் வழங்கும் முக்கிய சூத்திரதாரியை பொலிஸார் கடத்தல் பாணில் கைதுசெய்துள்ளனர்.

சம்பவம் பற்றிமேலும் தெரியவருகையில், 

யாழ்ப்பாணம் மத்திய பஸ் திரிப்பிடத்திற்கு முன்பாக இளைஞர் ஒருவரை கோப்பாய் பொலிஸார் கடத்தல் பாணியில் வெள்ளை வேனில் சென்று ஏற்றிச்சென்றுள்ளனர்.

இவ்வாறு தாம் வெள்ளை வேனில் ஏற்றிச்சென்று கைதுசெய்யப்பட்டநபர் ஆவா குழுவுக்கு முக்கிய தகவல்களை வழங்கும் நபரென கோப்பாய் பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த நபர் யாழ்ப்பாணம், இராமநாதன் வீதி, கலட்டியைச் சேர்ந்த 25 வயதுடைய இளைஞர் என்றும் அவர் யாழ் நகரிலுள்ள புடைவைக் கடையொன்றில் கடமையாற்றுகின்றார் என்றும் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

குறித்த இளைஞர் சம்பவதினமான நேற்று வேலை முடிந்து வீட்டுக்குச் செல்வதற்காக பஸ்ஸிற்காக காத்திருந்தபோது, வெள்ளை வேனொன்றில் வந்த கோப்பாய் பொலிஸார் இளைஞனை வேனில் ஏறுமாறு பணித்துள்ளனர். 

இளைஞர் வேனில் ஏறுவதற்கு மறுத்துள்ள நிலையில், பொலிஸார் அவரை வேனில் ஏற்றிச் சென்றுள்ளனர்.

இவ்வாறு வேனில் ஏற்றிச்சென்ற நிலையில், கைதுசெய்யப்பட்ட இளைஞரிடமிருந்து மோட்டார் சைக்கிளும் வாளொன்றும் மீட்கப்பட்டுள்ளதாகவும் இச் சம்பவம் பொதுமக்களுக்கு கடத்தாலாக தெரிந்திருந்தாலும் கைதுசெய்யப்பட்ட நபர் ஆவாகுழுவின் முக்கிய உளவாளியெனவும் யாழில் இடம்பெற்ற பல வாள்வெட்டுச் சம்பவங்களுக்கு இவரே உளவு பார்த்த முக்கிய சூத்திரதாரியெனவும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, தேடப்பட்டுவந்த நபர் என்ற ரீதியில் அவரை மிகவும் சூட்சுமமாக கைதுசெய்ததாகவும் அவரிடம் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் கோப்பாய் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.