வடமாகாணத்தில் உள்ள அரச வைத்தியசாலைகளில் கடமையாற்றுகின்ற தாதிய உத்தியோகஸ்தர்கள் இன்று  காலை முதல் பணிப்பகிஸ்கரிப்பில் ஈடுபட்டு வரும் நிலையில் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் கடமையாற்றுகின்ற தாதியர்கள் உள்ளிட்ட மருத்துவ சேவையாளர்களும்  பணிப்பகிஸ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து வடக்கு உற்பட நாடு முழுவதும் இன்று காலை 7 மணி தொடக்கம் 24 மணி நேரம் தாதியர்கள் உள்ளிட்ட மருத்துவ சேவையாளர்கள் பணிப்பகிஸ்கரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

தாதியர் சேவையில் நிலவும் சம்பள பிரச்சினைகள், மேலதிக கொடுப்பனவுகள் வழங்கப்படாமை உள்ளிட்ட பல்வேறு விடயங்களை முன்வைத்து குறித்த பணிப்பகிஸ்கரிப்பு முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

அந்த வகையில் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலை உற்பட மாவட்டத்தில் உள்ள  சில வைத்தியசாலைகளில் தாதிய உத்தியோகஸ்தர்கள் பணிப்பகிஸ்கரிப்பில் ஈடுபட்டு வருகின்றமையினால் வெளி நோயாளர் பிரிவு முற்றாக இயங்கவில்லை.

வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக வருகை தந்த பொது மக்கள் பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் நீண்ட நேரம் காத்திருந்த நிலையில் வீடு திரும்ப வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

தாதியர்களின் சம்பள பிரச்சினை உள்ளிட்ட தமது பல்வேறு பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக சந்தரப்பம் பெற்றுக் கொடுக்கப்பட்டால் உடனடியாக பணிப்பகிஸ்கரிப்பை கைவிட தயார் என குறித்த சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.