வவுனியா மாவட்ட வைத்தியசாலையில் தாதியர்கள் உட்பட பல துறைகளை சேர்ந்த சுகாதார பிரிவினர் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

நாடு பூராகவும் தாதியர்கள் உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்தவர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ள நிலையில் அதற்கு ஆதரவாக வவுனியா மாவட்ட வைத்தியசாலையின் தாதியர்கள், மருந்தாளர்கள், எக்ஸ்ரே கதிரியக்க உத்தியோகத்தர்கள், மருத்துவ மாதுக்கள், பொதுச்சுகாதார பிரிவினர் உட்பட்ட சுகாதார சேவையினர்  பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

இதன் காரணமாக சிகிச்சைக்காக வைத்தியசாலை வந்துள்ள நோயாளர்கள் வைத்தியர்களால் பரிசோதிக்கப்பட்டபோதிலும் மருந்தாளர்களும் குறித்த பணிப்பகிஸ்கரிப்பில் ஈடுபட்டுள்ளதால் மருந்துகளை பெற்றுக்கொள்ளாமல் வீடு திரும்புகின்றனர்.

சிறுநீரக நோயாளர்கள் மற்றும் சத்திரசிகிச்சை மேற்கொண்டவர்களிற்கு கூட மருந்துகள் வழங்கப்படாத நிலையில் நோயாளர்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்துள்ளனர்.

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து நாடு முழுவதும் முன்னெடுக்கப்படும் அரச தாதியர்கள், துணைமருத்துவ சேவையாளர்களின் போராட்டத்துக்கு ஆதரவாகவே இந்தப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளதாக துணை வைத்திய சேவையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

சம்பள முரண்பாடு, பதவி உயர்வு, மேலதிக நேரக் கொடுப்பனவு நிலுவை, கைவிரல் அடையாள வருகை பதிவேட்டை நடைமுறைப்படுத்த மேற்கொண்ட தீர்மானத்தை நிறுத்தல் போன்ற கோரிக்கைகளை முன்வைத்து இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

எனினும் அவசர சிகிச்சை பிரிவு மற்றும் அத்தியாவசிய சேவைகளில் தாதியர்கள் ஈடுபட்டுள்ள போதிலும் நோயாளர்கள் விடுதிகளில் தாதியர்கள் சேவையில் ஈடுபடாது பணிப்புறக்கணிப்பு செய்துள்ளனர்.