ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பங்கேற்ற வைபவம் ஒன்று இடம்பெற்ற இடத்துக்கு அருகில் உள்ள சொகுசு வீடொன்றினை சுற்றி வளைத்து ஆயுதங்கள் பலவற்றை பொலிஸ் விஷேட அதிரடிப் படையினர் கைப்பற்றியுள்ளனர். இந்த நிலையில் இந்த சம்பவம் தொடர்பில் அவ்வீட்டில் இருந்த பத்தரமுல்ல - தயலங்கம வடக்கைச் சேர்ந்த ஒரே குடும்பத்தின் சகோதரர்களான 57,49 வயதுகளை உடைய இருவரை கைது செய்த விஷேட அதிரடிப் படையினர் அவர்களை மேலதிக விசாரணைகளுக்காக தலங்கம பொலிஸாரிடம் கையளித்துள்ளனர்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று முன்தினம் கொஸ்வத்தை, காட்சு பல்கலைக்கழகத்தின் வைத்திய இரசாயன கூட அலுவலர்களின் வருடாந்த ஒன்றுகூடலுக்கு பிரதம விருந்தினராக அழைக்கப்பட்டிருந்த நிலையில் அங்கு சென்றிருந்தார்.  ஜனாதிபதி அங்கு செல்ல முன்னர், மருதானை விஷேட அதிரடிப் படை முகாமின் வீரர்கள் அப்பகுதியில் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். இதன்போதே அங்குள்ள சொகுசுவீடொன்று சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. இதன்போது அவ்வீட்டில் அலுமாரிக்குள் இருந்து வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட கைக்குண்டு, கைத்துப்பாக்கி தாங்கி, விளையாட்டு துப்பாக்கி, 4 தோட்டாக்கள் மற்றும் 16 வெற்றுத்தோட்டாக்கள் ஆகியன கைப்பற்றப்பட்டுள்ளன. 

இதனைவிட கஜ முத்து என சந்தேகிக்கப்படும் இரு முத்துக்களும் ஒரு தங்க சங்கிலியும் மீட்கப்பட்டுள்ளன. இதனையடுத்து வீட்டின் உரிமையாளரான 57 வயதான நபர் கைது செய்யப்பட்டு தலங்கம பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். அவரிடம் முன்னெடுக்கப்பட்ட மேலதிக விசாரணைகளில் அவரது சகோதரரான 49 வயதுடைய நபரும் நான்கு வெவ்வேறு  நபர்களுக்கு சொந்தமான கடவுச் சீட்டுக்களுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைதான சந்தேக நபர்களில் 57 வயதான நபர் நேற்று அச்சுறுத்தும் ஆயுத சட்டத்தின் கீழ் கடுவலை மேலதிக நீதிவான் முன்னிலையில் ஆஜர் செய்யப்பட்டு  எதிர்வரும் 29 ஆம் திகதி வரையும் 49 வயதான நபர் பிரிதொரு நபருக்கு சொந்தமான கடவுச் சீட்டை வைத்திருந்தமை தொடர்பில் ஆஜர் செய்யப்பட்டு இன்று வரையும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். மேலதிக விசாரணைகளை தலங்கம பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.