இந்­தி­யா­வு­ட­னான பொரு­ளா­தார, வர்த்­தக உடன்­ப­டிக்­கை­களை பலப்­ப­டுத்­து­வது தொடர்­பாக இலங்கை வரும் இந்­திய வெளி­யு­ற­வுத்­துறை அமைச்சர் சுஷ்மா சுவ­ரா­ஜுடன் பேசப்­படும். அதை­வி­டுத்து “சீபா” உடன்­ப­டிக்கை தொடர்­பாக பேசவும் மாட்டோம். அதனை கையெ­ழுத்­தி­டவும் மாட்டோம் என திட்­ட­வட்­ட­மாக வெளி­வி­வ­கார பிர­தி­ய­மைச்சர் ஹர்ஷ டி சில்வா தெரி­வித்தார்.

உள்­ளக விசா­ரணை தொடர்­பாக ஐ.நா. மனித உரிமை ஆணை­யாளர் நாயகம் செய்ட் அல் ஹுசை­னுடன் பேச்சு நடத்தி தீர்­மானம் எடுக்­கப்­படும் என்றும் பிர­தி­ய­மைச்சர் குறிப்­பிட்டார்.

பிட்­ட­கோட்­டே­யி­லுள்ள ஐ.தே.க. தலை­மை­ய­க­மான சிறி­கொத்­தாவில் நேற்று  இடம்­பெற்ற ஊட­க­வி­ய­லாளர் மாநாட்டின் போதே பிர­தி­ய­மைச்சர் ஹர்ஷ டி சில்வா மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

இங்கு அவர் மேலும் உரை­யாற்­று­கையில்,

இலங்­கைக்கு விஜ­யத்தை மேற்­கொள்ளும் இந்­திய வெளி­யு­றவு அமைச்சர் சுஷ்மா சுவ­ரா­ஜுடன் “சீபா” உடன்­ப­டிக்கை தொடர்­பாக பேசப்­ப­ட­மாட்­டாது.

அதே­வேளை சீபா உடன்­ப­டிக்கை கையெ­ழுத்­தி­டப்­பட மாட்­டாது என அர­சாங்கம் உறு­தி­யாக அறி­வித்­து­விட்­டது. ஆனால் இன­வாத சக்­திகள் பொய்­யான பிர­சா­ரங்­களை முன்­னெ­டுக்­கின்­றன. அதே­வேளை இந்­தி­யா­வுடன் வர்த்­தக, பொரு­ளா­தார உடன்­ப­டிக்­கை­களை வலுப்­ப­டுத்தும் நட­வ­டிக்­கை­களை அரசு தொடர்ந்து முன்­னெ­டுக்கும். இவ்­வி­ட­யத்தில் அரசு பின்­னிற்­க­மாட்­டாது.

தற்­போது இந்­தி­யா­வு­ட­னான வர்த்­தக மற்றும் தொழில்­நுட்பம் (ECTA) தொடர்­பி­லான உடன்­ப­டிக்கை கையெ­ழுத்­தி­டு­வது தொடர்­பாக இரு தரப்பு பேச்­சு­வார்த்­தைகள் நடத்­தப்­பட்டு வரு­கின்­றன .

இது தொடர்பில் இலங்­கையில் கல்­வி­மான்கள், அரச வைத்­திய அதி­கா­ரிகள் சங்­கத்­தினர், பொறி­யி­ய­லா­ளர்கள் சங்கம், நிர்­மாண நிபு­ணர்கள் உட்­பட பல்­வேறு தரப்­பி­ன­ருடன் பேச்­சு­வார்த்­தைகள் நடத்­தப்­படும்.

அவர்கள் அனை­வ­ரது கருத்­துக்­களும் பெறப்­பட்ட பின்­னரே இந்த உடன்­ப­டிக்கை தொடர்­பான நகல் தயா­ரிக்­கப்­படும்.

இதை­வி­டுத்து அர­சாங்கம் இவ்­வி­ட­யத்தில் தனித்துத் தீர்­மானம் எடுக்­காது. அத்­தோடு இந்­தி­யா­வு­ட­னான வர்த்­தக பொரு­ளா­தார உற­வுகள் தொடர்­பாக பொய்­யான இன­வாத பிர­சா­ரங்­களை மேற்­கொள்­வதை விடுத்து இந்­தி­யாவின் வர்த்­தக சந்­தையை நாம் எவ்­வாறு வெற்றி கொள்­வது என்­பது தொடர்பில் மூலோ­பா­யங்­களை வகுக்க வேண்டும்.

இலங்கை பரி­மாற்­றத்­திற்­கான மத்­திய கேந்­திர நிலை­ய­மாக உள்­ளது. இதனை எமக்குச் சாத­க­மாக பயன்­ப­டுத்திக் கொண்டு இலங்­கையை பொரு­ளா­தார அபி­வி­ருத்­தி­ய­டைந்த நாடாக மாற்ற வேண்டும்.

இன்று வியட்­நாமில் தினமும் பொரு­ளா­தார வல­யங்கள் ஆரம்­பிக்­கப்­ப­டு­கின்­றன. ஏன் எம்மால் முடி­யாது. உலகில் பல நாடு­களில் பொரு­ளா­தார நெருக்­க­டிகள் தலை­தூக்­கி­யுள்­ளன. மத்­திய கிழக்கு நாடுகள், சவூதி அரே­பியா போன்ற நாடு­க­ளிலும் சீனா­விலும் இந்­நி­லை­யேற்­பட்­டுள்­ளது.

இச் சந்­தர்ப்­பத்தில் இவை­களை வெற்றி கொள்ளும் விதத்தில் எமது பொரு­ளா­தார நட­வ­டிக்­கை­களை முன்­ன­கர்த்த வேண்டும்.

எதிர்வரும் 6 ஆம் திகதி இலங்கை வரும் ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் நாயகம் எதிர்வரும் 10 ஆம் திகதி வரை இங்கு தங்கியிருப்பார்.

இதன்போது ஐ.நா.வில் நிறைவேற்றப் பட்ட பிரேரணை தொடர்பிலும் உள்நாட்டு விசாரணைப் பொறி முறை தொடர்பாகவும் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு உள்ளக விசாரணை தொடர்பில் முடிவெடுக்கப்படும் என்றார்.