சர்வதேச சுகாதார ஸ்தாபனமானது ஸிகா வைரஸ் தொற்று வேகமாக பரவி வருவதையொட்டி சர்வதேச பொது சுகாதார அவசரகால நிலைமையொன்றை திங்கட்கிழமை பிரகடனப்படுத்தியுள்ளது.

நுளம்புகளால் பரவும் இந்த வைரஸ் தாக்கம் காரணமாக குழந்தைகள் குறைபாடுகளுடனும் சிறிய தலைகளுடனும் பிறப்பதாக நம்பப்படுகின்ற நிலையிலேயே மேற்படி பிரகடனம் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்த வைரஸ் எல் சல்வாடோர், பிரேசில், பிரெஞ் பொலினேசியா ஆகிய நாடுகளில் மிக மோசமாக பரவி வருவதாக உலக சுகாதார ஸ்தாபனத்தைச் சேர்ந்த மருத்துவ கலாநிதி புரூஸ் அயில்வார்ட் தெரிவித்தார்.

மேற்படி வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட பிராந்தியங்களில் வைரஸ் தொற்றை கண்டறிவதற்கான பரிசோதனைகளை மேற்கொள்ளல் மற்றும் தொற்றைத் தடுத்தல் உள்ளடங்கலான நடவடிக்கைகளை மேற்கொள்ள இந்த அவசர காலநிலை பிரகடனம் தேவையாகவுள்ளதாக உலக சுகாதார ஸ்தாபனம் குறிப்பிட்டுள்ளது.

அதன் பிரகாரம் இந்தப் பிரகடனம் வைரஸை இனங்காணல், வைரஸ் பரவலை முறியடிப்பதற்கும் அதனால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குணப்படுத்துவதற்குமான ஆய்வுகளை மேற்கொள்ளல் என்பவற்றை முன்னெடுக்க வழிவகை செய்வதாக உள்ளது.

சுவிட்ஸர்லாந்தின் ஜெனிவா நகரில் இடம்பெற்ற சர்வதேச உலக சுகாதார ஒழுங்குபடுத்தல் அவசரகால சபையின் முதலாவது கூட்டத்தின் போது ஸிகா வைரஸ் பரவல் வழமைக்கு மாறான நிகழ்வொன்றாகக் விபரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் அந்த சபையின் கூட்டத்தின் போது ஸிகா வைரஸ் சர்வதேச கவலைக்குரிய பொது சுகாதார அவசரகால நிலைமையொன்றை தோற்றுவித்துள்ளதை அதன் உறுப்பினர்கள் ஏற்றுக் கொண்டுள்ளனர்.

கர்ப்பிணி பெண்கள் அல்லது கர்ப்பம் தரிக்க முயற்சிக்கும் பெண்கள் ஸிக்கா வைரஸ் பாதிக்கப்பட்ட நாடுகளுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும் அல்லது தள்ளி வைக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

ஸிகா வைரஸ் அபாயகரமான நிலையிலுள்ளதாக கடந்த வாரம் உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.