தனது கையில் புத்தபெருமானின் உருவத்தை பச்சை குத்தியிருந்த நிலையில் இலங்கைக்கு வருகைதந்த சமயம் கட்டுநாயக்க விமானநிலையத்தில் கைதுசெய்யப்பட்டு, அங்கு மிகவும் தரக்குறைவாக நடத்தப்பட்ட பிரித்தானியப் பெண், தான் இனி ஒருபோதும் இலங்கைக்கு வரப்போவதில்லை எனத் தெரிவித்துள்ளார்.
நயோமி மைக்கல் கொல்மன் என்ற குறித்த பிரித்தானியப் பெண் தனது அடிப்படை உரிமைகள் மீறப்பட்டதாகக் கூறி தாக்கல் செய்த வழக்கில் அவருக்கு ரூபா 6இலட்சம் நஷ்டஈடும் 2இலட்சம் வழக்குசெலவு தொகையும் வழங்கக் கூறி உச்சநீதிமன்றம் அண்மையில் தீர்ப்பளித்திருந்தது.
பிரிட்டிஸ் பெண்ணான கொல்மன், ஹோக்ஸ்பர் லொட்ஜ் என்ற இடத்தைச் சேர்ந்த புனர்வாழ்வு உளநல மருத்துவ சேவைகள் நிறுவனத்தில் தாதியாக பணிபுரிந்து வருகின்றார்.
சம்பவம் நிகழ்ந்த 2014ஆம் ஆண்டு அவர் சட்ட மாஅதிபர், பொலிஸ் சார்ஜன்ட் உபசேன, குருணாகல் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் சுரவீர, நீர்கொழும்பு சிறைச்சாலை பொறுப்பதிகாரி, பொலிஸ் மாஅதிபர், குடிவரவு, குடியகல்வு திணைக்கள கட்டுப்பாட்டாளர் சூளானந்த டி சில்வா ஆகியோரை பிரதிவாதிகளாக குறிப்பிட்டு தனக்கு பத்து மில்லியன் ரூபா இழப்பீடு வழங்கும்படி தனது மனுவை சமர்ப்பித்திருந்தார்.
கொல்மனுக்காக விஷ்வா டி லிவேரா தென்னக்கோனின், ஆலோசனையின் கீழ் ஜே.சீ வெலியமுன உடன் புலஸ்தி ஹேவமான ஆகிய இருவரும் ஆஜராகினார்கள்.
தான் ஒரு அர்ப்பணிப்புடனான பௌத்தர் எனவும் நேபாளம், தாய்லாந்து, கம்போடியா மற்றும் இந்தியாவில் தியான நிகழ்வுகளில் தான் பங்குபற்றுவதாகவும் ஒரு காணிக்கையாகவும் தன்னுடைய அர்ப்பணிப்பின் ஒரு வெளிப்பாடாகவும் தாமரை மலரில் அமர்ந்துள்ள புத்தரின் உருவத்தை தனது வலதுபுற மேற்புஜத்தில் பச்சைகுத்தி உள்ளதாகவும் மனுதாரரின் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் தான் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வந்திறங்கி தனது பயணப் பொதிகளைப் பெற்றுக் கொள்ள முயற்சிக்கையில், தன்னை அணுகிய டெக்ஸி சாரதி ஒருவர், தனது கரத்தில் காணப்படும் புத்தர் உருவம் இலங்கையில் ஆட்சேபனைக்குரியதாக இருக்கலாம் எனத் தெரிவித்தார் என்றும் அவர் கெலும் சமிந்த என பின்னர் அடையாளம் காணப்பட்டதாகவும் அவருடன் சிவில் பாதுகாப்புப் படைப்பிரிவைச் சேர்ந்த ஒருவரும் இணைந்து கொண்டதாகவும் அவர் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், அவர்கள் தன்னை கட்டுநாயக்க பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்றதையடுத்து பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தனது கடவுச்சீட்டைப் பறிமுதல் செய்ததாகவும் எனினும், தன்னிடம் வாக்குமூலம் எதுவும் பெறப்படவில்லை என்றும் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு பின்னர் தடுத்து வைக்கப்பட்டதாகவும், தான் எதற்காக தடுத்துவைக்கப்பட்டேன் என்று தனக்கு விளக்க மளிக்கப்படவில்லை எனவும் கொல்மன் தனது மனுவில் தெரிவித்துள்ளார்.
மேலும், அவர் தனக்கு பிரித்தானிய உயர்ஸ்தானிகரை சந்திக்க சந்தர்ப்பம் வழங்கப்படவில்லை எனவும் தனது கைது பற்றி உயர்ஸ்தானிகருக்கு தெரிவிக்கப்பட்டதா? என்பது தனக்கு தெரிவிக்கப்படவில்லை எனவும் முறையிட்டுள்ளார்.
சிறைச்சாலையில் காவலர் ஒருவரினால் தனக்கு ஒரு சட்டத்தரணி அறிமுகம் செய்து வைக்கப்பட்டார். எனினும் எந்தவித ஆலோசனைகளும் வழங்கவில்லை எனவும், அதற்காக தான் ரூபா 5000 செலுத்த வேண்டி இருந்ததெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தான் நீதிமன்றத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த போது அங்கு பொறுப்பாக இருந்த காவலர் ஒருவர் கீழ்த்தரமான, ஆபாசமான, வெளிப்படையான பாலியல் ரீதியான கருத்துக்களைத் தெரிவித்து தன்னைக் கேவலப்படுத்தியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேற்படி காவலர் தனக்கு "ஜிகி ஜிகி" தேவையெனக் குறிப்பிட்டதோடு, நாக்கை நீட்டிக் காட்டுவது உட்பட பல்வேறு பாலியல் சமிக்ஞைகளைப் பல்வேறு சந்தர்ப்பங்களில் செய்ததாகவும் கொல்மன் குறிப்பிட்டுள்ளார்.
தனது வழக்கு பி.ப 2.30 மணியளவில் கூப்பிடப்பட்டதாகவும் எனினும், வழக்கு நடவடிக்கைகள் ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்படாததால் வழக்கு நடைமுறைகளைத் தன்னால் புரிந்து கொள்ள முடியவில்லை எனவும் தான் பேச அனுமதிக்கப்படவில்லை எனவும் அவர் முறையிட்டுள்ளார்.
வழக்கின் முடிவில் அவரது வேண்டுகோள்கள் எவையும் பொருட்படுத்தப்படாமல் தான் நாடுகடத்தப்பட இருந்ததாகவும் தன்னை மாலைதீவுக்கு செல்ல அனுமதிப்பதாக தனது சட்டத்தரணி தன்னிடம் தெரிவித்ததாகவும் கூறிய கொல்மன், அதன்பின்னர் தான் நாடுகடத்தல் நிலையம் ஒன்றில் காவல் வைக்கப்பட்டதாகவும் கூறினார்.
தன்னுடைய வழக்கு, சட்டத்தின் எந்த ஏற்பாட்டின் கீழ் தான் கைது செய்யப்பட்டு குற்றஞ்சாட்டப்பட்டாரெனவோ தண்டனைக்குள்ளாக்கப்பட்டு காவலில் வைக்கப்பட்டு நாடுகடத்தப்பட்டமை குறித்தோ தனக்கு எந்தவித விளக்கமும் அளிக்கப்படவில்லை எனவும் கொல்மன் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், சிறைச்சாலை பெண்காவலர் ஒருவர் ரூ.10,000 தன்னிடம் கேட்டதாகவும் தன்னுடைய கையடக்கத் தொலைபேசியை எடுத்துச் செல்ல முயற்சித்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தன் முழு உடம்பையும் பெண் சிறைச்சாலை அதிகாரியொருவர் பரிசோதனை செய்ததாகவும் சுமார் அறுபது பெண் சிறைக்கைதிகளுடன் தான் படுத்துறங்கியதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
அவருடைய கடவுச்சீட்டு, குடிவரவு, குடியகல்வு அதிகாரியொருவரினால் மீண்டும் பறிமுதல் செய்யப்பட்டதாக தெரிவித்த அவர், பல வேண்டுகோள்களுக்குப் பின் தன்னை உயர்ஸ்தானிகருடன் தொடர்புகொள்ள அனுமதித்ததாகவும் அதன் பின்னர் தன்னை மீரிஹானை குடியகல்வு தடுப்பு நிலையத்துக்கு அழைத்துச் சென்று இருநாட்கள் வைத்திருந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இழப்பீடு வழங்குவது குறித்த தீர்ப்பையடுத்து ஊடகவியலாளர்களைச் சந்தித்துப் பேசிய கொல்மன், ''இத்தீர்ப்பு தனக்கு அதிர்ச்சியளித்ததாகவும் பல முயற்சிகளுக்குப் பிறகு இந்த தீர்ப்பு வழங்கப்பட்டது குறித்து தான் மகிழ்ச்சியடைவதாகவும்'' தெரிவித்துள்ளார்.
தான் உண்மையாக பௌத்த மதத்தைப் பின்பற்றுபவர் எனவும் தெரிவித்த அவர், இனியொருபோதும் இலங்கை வரும் எண்ணம் இல்லை எனவும் கூறியுள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM