(ஆர்.ராம், எம்.எம்.மின்ஹாஜ்)

மத்திய வங்கி பிணைமுறி மோசடி தொடர்புப்பட்டுள்ள பெர்ப்பச்சுவல் டிரசரிஸ் நிறுவனத்தின் உரிமையாளர் அர்ஜூன் அலோசியஸுடன் பாராளுமன்ற உறுப்பினர்கள் 41 பேர் உரையாடியுள்ள நிலையில் ஐவரின் பெயர்களை மட்டுமே ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு வெளியிட்டுள்ளது. ஆகவே அனைவரின் பெயர்களையும் முழுமையாக வெளியடவேண்டும் என பிரதியமைச்சர் அஜித் பீ பெரேரா தெரிவித்தார். 

பாராளுமன்றத்தில் இன்று சனிக்கிழமை 2018 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத்திட்டத்தில் பாதுகாப்பு, நீதி, சட்டம் ஒழுங்கு மற்றும் தென்மாகாண அபிவிருத்தி அமைச்சுக்கள் ஆகியவற்றுக்கான ஒதுக்கீடுகள் தொடர்பான குழுநிலை விவாத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

எமது அரசாங்கம் ஊழல், மோசடிகளை ஒழிப்பதற்குரிய நடவடிக்கைகளை எடுப்போம் என மக்களுக்கு வாக்குறுதிகளை வங்கியிருந்தோம். அதனடிப்படையில் அதற்குரிய அறிக்கை தயாரிக்கப்பட்டு ஜனாதிபதியிடத்தில் கையளித்திருந்தோம். அதற்கான அமைச்சரவை அனுமதி கிடைத்துள்ளது. அமைச்சரவை உபகுழுவொன்றும் நியமிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதியும் இதற்கான அனுமதி வழங்கியுள்ளார். நீதி அமைச்சரும் நடவடிக்கைகளை எடுத்துள்ளார். 

அதனடிப்படையில் முதலில் மேல்நீதிமன்றங்களில் நீதிபதிகளை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. 75ஆக இருந்த மேல் நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை 110 வரையில் அதிகரிக்கப்பட்டுள்ளது. அத்துடன் ஊழல் மோசடிகள் தொடர்பான வழக்குகளை மூன்று நீதிபதிகளைக் கொண்ட டியல் அட்பார் முறையிலான அமர்வினைக் கொண்ட விசேட மேல் நீதிமன்றங்களை  விசாரிப்பதற்காக அமைப்பதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. அதற்கான அமைச்சரவையும் அனுமதியும் பெறப்பட்டுள்ளது. அதனடிப்படையில் அடுத்த சில மாதங்களுக்குள் அந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு செயற்பாடுகள் ஆரம்பிக்கப்படவுள்ளன. 

மத்திய வங்கி பிணைமுறி மோசடி தொடர்புபட்டுள்ள பெர்ப்பச்சுவல் டிரசரிஸ் நிறுவனத்தின் பிரதானி அர்ஜூன் அலோசியஸுடன் ஆளும் கட்சி எம்.பிக்கள் ஐந்து பேர் பேசியதாகவே மத்திய வங்கி மோசடி ஆணைக்குழு வெளியிட்டது. எனினும் உண்மையில் பாராளுமன்ற உறுப்பினர்கள் 41 பேர் அர்ஜூன் அலோசியஸ_டன் பேசியுள்ளனர். ஆனால் ஐந்து பேரின் விபரத்தையே அணைக்குழு  வெளியிட்டுள்ளமை பிழையானது.

இதனால் ஐந்து பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அநீதி ஏற்பட்டுள்ளது. எனினும் ஏனைய 36 எம்.பிக்கள் தொடர்பில் எந்தவொரு தகவலும் வெளியிடப்படவில்லை. ஆகவே அந்த 41 பேர் யார் என்பதனை அறிய வேண்டும். இதற்காக 225 பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒத்துழைக்க வேண்டும். 

எனவே 225 எம்.பிக்களின் தொலைபேசி அழைப்பு விபரத்தை சபாநாயகர் வெளியிட வேண்டும். இது திங்கட்கிழமை சபாநாயகரின் தீர்மானத்தினை வெளியிட வேண்டும். ஆகவே குறித்த விடயம் தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இதன் உண்மை தன்மையை நாட்டு மக்களுக்கு தெரிவுப்படுத்த வேண்டும் என்றார்.