கட்டுநாயக்க விமான நிலையத்தில் தொடர்ச்சியாக மூன்று நாட்கள் உணவின்றி  தங்கியிருந்த பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்த ஒருவர் அடையாளங்காணப்பட்டுள்ளார்.

தாய்லாந்தின் பேங்கொங் நகரிலிருந்து தொழிநுட்ப பணிக்காக கட்டார் செல்வதற்கு விமானம் ஏறிய குறித்த பிலிப்பைன்ஸ் நாட்டு பிரஜை விமான மாற்றத்திற்காக இலங்கையில் இறங்கியுள்ளார்.

கடந்த 13ஆம் திகதி கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இறங்கிய குறித்த பிலிப்பைன்ஸ் பிரஜை கடந்த 14ஆம் திகதி கட்டார் செல்வதற்காக இலங்கை விமான சேவை நிறுவனம் ஒன்றின் விமானத்திற்கு செல்ல ஆயத்தமாகியுள்ளார்.

எனினும் விமானத்தின் ஆசனங்கள் அனைத்தும் பயணிகளுக்கு ஒதுக்கப்பட்டிருந்ததாகவும் அவருக்கு ஆசனம் இல்லை எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் குறித்த பிலிப்பைன்ஸ் பிரஜை  விமான நிலையத்தில் எவரையும் தொடர்பு கொள்ள முடியாத நிலையில் உண்ண உணவுமின்றி மூன்று நாட்கள் இருந்துள்ளார்.

பிலிப்பைன்ஸ் நாட்டு பயணியின் தகவல்கள் எதுவுமின்றி அவர்களது உறவினர்கள் தேடிய நிலையில் அவரின் சகோதரி ஒருவர் கட்டாரிலிருந்து இலங்கை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு இன்றைய தினம் வருகை தந்துள்ளார்.

விமான நிலையத்திற்கு வருகை தந்த குறித்த பயணியின் சகோதரி குடிவரவு குடியகல்வு திணைக்களத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

இதனை தொடர்ந்து பிலிப்பைன்ஸ் பயணி விமான நிலையத்தில் தேக ஆரோக்கியமின்றி உறங்கிக்கொண்டிருந்த நிலையில் இனங்காணப்பட்டுள்ளார்.