லெபனான் பிரதமர் சாட் ஹரிரியின் திடீர்ப் பதவிவிலகல் இன்னொரு தடவை நாட்டை அரசியல் உறுதிப்பாடற்ற நிலைக்குள் தள்ளிவிட்டிருப்பது மாத்திரமல்ல, சவூதி அரேபியாவுக்கும் ஈரானுக்கும் இடையிலான பிராந்திய பதற்ற நிலையை மீளவும் மூளவைத்திருக்கிறது. 

லெபனான் பல வருடங்களாக பிராந்திய நாடுகளின் மறைமுக யுத்தங்களுக்கான (Proxy wars) களமாக இருந்துவந்திருக்கிறது. 

சவூதி அரேபியாவுடன் நெருக்கமான வர்த்தக மற்றும் அரசியல் உறவுகளைக் கொண்ட சுன்னி முஸ்லிமான ஹரிரி ஈரானின் ஆதரவைக் கொண்ட ஹிஸ்புல்லா இயக்கத்துடன் கூட்டரசாங்கமொன்றை 11 மாதங்களுக்கு முன்னர் ஏற்படுத்திக் கொண்டார். 

ஷியா முஸ்லிம் அரசியல் கட்சியாகவும் திரட்டல் படையாகவும் இயங்கும் ஹிஸ்புல்லாவுக்கு ஈரானின் ஆதரவு இருக்கிறது. ஹரிரி ஹிஸ்புல்லா இயக்கத்துடன் ஏற்படுத்திக் கொண்ட கூட்டரசாங்கத்தின் விளைவாக லெபனானின் ஜனாதிபதியாக மைக்கேல் ஓன் தெரிவாவதற்கு வாய்ப்பு ஏற்பட்டது. 

ஆனால் அதற்குப் பின்னர் சவூதி அரேபியா பொறுமை இழந்துவிட்டது. ஹிஸ்புல்லா இயக்கத்தை எதிர்த்து நிற்க இயலாதவராக ஹரிரி இருந்ததே அதற்குக் காரணமாகும். ஹிஸ்புல்லா இயக்கத்தின் திரட்டல் பலிகள் சவூதி அரேபியாவின் இன்னொரு எதிரியான சிரிய ஜனாதிபதி டைஷார் அல் அசாத்தின் சார்பில் அந்நாட்டு உள்நாட்டுப் போரில் சம்பந்தப்பட்டிருக்கிறன. 

இத்தகையதொரு பின் புலத்திலேயே ஹரிரி சவூதியின் தலைநகர்  றியாயத்தில் இருந்த வண்ணம் பிரதமர் பதவியை இராஜினாமா செய்வதாக கடந்த நான்காம் திகதி அறிவித்தார். அந்த அறிவிப்பை வெளியிட்டு ஒரு வாரத்துக்கும் அதிகமான காலம் கடந்துவிட்ட போதிலும் அவர் இன்னமும் லெபனான் திரும்பவில்லை. பதவி விலகல் தொடர்பான உத்தியோகபூர்வ நடைமுறைகளைப் பூர்த்தி செய்யவும் இல்லை. 

அதனால் லெபனானின் கூட்டரசாங்கம் அடுத்தகட்ட நடவடிக்கைகளை எடுக்க முடியாமல் இருக்கிறது. அவர் லெபனானுக்கு திரும்பி வருவதற்கு கால தாமதமாவதால் அவரை பதவிவிலகுமாறு சவூதி அரேபியாவே நிர்ப்பந்திருந்தது என்றும் தனது விருப்பத்துக்கு முரணாகவே அவர் றியாத்தில் தடுத்து வைக்கப்பட்டிருகிறார் என்றும் ஊகங்கள் கிளம்பியிருக்கின்றன. இந்த நிகழ்வுப் போக்குகள் எல்லாம் சவூதி அரேபியா ஹிஸ்புல்லாவுக்கும் ஈரானுக்கும் எதிராக நெருங்குதல்களை தீவிரப்படுத்தியிருக்கும் ஒரு தருணத்தில் இடம்பெறுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்த நிலைவரத்தில் பிராந்திய நாடுகளின் முரண்பாடான நலன்கள் சம்பந்தப்பட்டிருக்கின்றன. ஹிஸ்புல்லா இயக்கம் போரில் தீவிரமாக ஈடுபட்ட அனுபவத்தின் காரணமாக ஓரளவு பாரம்பரிய இராணுவமாக வளர்ச்சியடைந்துவிட்டது. ஹிஸ்புல்லா இயக்கத்தை அழித்தொழிக்கும் நோக்குடன் 2006 ஆம் ஆண்டில் லெபனானை இஸ்ரேல் தாக்கியபோதிலும் அதில் வெற்றி பெறவில்லை. அதற்குப் பிறகு ஹிஸ்புல்லா இயக்கம் ஈரானிடமிருந்து பெருமளவான ஆயுதங்களை பெற்று குவித்து வைத்திருக்கிறது. சிரிய உள்நாட்டுப் போரில் ஈடுபட்டதன் காரணத்தால் போர்க்களப் பயிற்சியையும் பெற்றிருக்கிறது. 

ஹிஸ்புல்லாவின் அரசியல் பிரிவு பெய்ரூத்தின் அதிகார மட்டங்களில் பெருமளவு செல்வாக்குக் கொண்டதாகவும் விளங்குகிறது. ஈரானுக்காக பதிலாள் வேலையைச் செய்கின்ற ஒரு சக்தியாக ஹிஸ்புல்லாவை நோக்கும் சவூதி அரேபியா இவ்வியக்கத்தின் இராணுவ மற்றும் அரசியல் செல்வாக்கைக் கண்டு விசனமடைந்திருக்கிறது. 

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் சவூதி அரேபியாவின் கொள்கைகளை ஆதரிக்கிறார். தனது வடக்கு எல்லையில் ஹிஸ்புல்லாவை அச்சுறுத்தலாக நோக்கும் இஸ்ரேலின் அந்தரங்க ஆதரவு சவூதி அரேபியாவுக்கு இருக்கிறது. ஹரிரியை இராஜினாமா செய்ய சவூதி அரேபியாவே நிர்ப்பந்தித்திருந்தால் ஹிஸ்புல்லாவுடன் கூடுதலான அளவுக்கு முரண்படக்கூடிய அணுகுமுறையைக் கடைப்பிடிக்கக்கூடிய இன்னொரு சுன்னி முஸ்லிம் தலைவர் லெபனானின் புதிய பிரதமராக வருவதையே சவூதி ஆட்சியாளர்கள் விரும்புவர். 

லெபனானில் இருந்து வெளியேறுமாறு தனது பிரஜைகளை சவூதி அரேபியா கேட்டிருக்கிறது. இதை இராணுவ நடவடிக்கையொன்றுக்கான சமிக்ஞையாகவே பார்க்க வேண்டியிருக்கிறது. எதிர்த்துப் போராடுவதில் ஹிஸ்புல்லாவுக்கு இருக்கின்ற ஆற்றல்களையும் வரலாற்றையும் அடிப்படையாகக் கொண்டு நோக்கும் போது அவ்வியக்கம் அதன் அடிப்படை நலன்கள் தாக்குதலுக்குள்ளாகும் போது திருப்பித் தாக்கக்கூடும். 

மேற்காசிய பூகோள அரசியல் சதுரங்கத்தில் மீண்டும் ஒரு தடவை பகடைக் காயாக லெபனான் மாறியிருப்பது மிகவும் துரதிர்ஷ்டவசமானதாகும். 1975 - 1990 காலகட்ட உள்நாட்டுப் போரின் பயங்கரங்களை நினைத்துப் பார்க்கக்கூடிய லெபனான் தலைவர்கள் ஐக்கியப்பட்டு நின்று தங்கள் உள்நாட்டு அரசியலில் இருந்து விலகியிருக்குமாறு பிராந்தியத்தின் வலிமைமிகு நாடுகளைக் கேட்க வேண்டும் என்பதே சர்வதேச அரசியல் அவதானிகளின் அபிப்பிராயமாக இருக்கிறது. 

உடனடியாக நாடு திரும்பி தனது இராஜினாமாவின் பின்னாலுள்ள உண்மையான காரணத்தை ஹரிரி நாட்டு மக்களுக்கு விளக்க வேண்டும் என்று லெபனான் அரசியல் தலைவர்கள் கேட்க வேண்டும். இராஜினாமாவின் பின்னணியில் சவூதி ஆட்சியாளர்கள் இருக்கிறார்களா என்பதை ஒளிவு மறைவின்றி அவர் கூற வேண்டும். 

அதேவேளை, ஹிஸ்புல்லா இயக்கம் அதன் கூட்டரசாங்கத்தின் பங்காளிகளின் அக்கறைகளை பரிசீலனைக்கெடுத்து அரசியல் சமநிலையை குழப்பியடிக்கக்கூடிய அணுகுமுறைகளைத் தவிர்க்கத் தயாராயிருக்க வேண்டும். இந்த அரசியல் சமநிலை குழப்பியடிக்கப்பட்டால் லெபனானில் உள்ள சகல தரப்பினருக்குமே பாதிப்புத்தான். எவருக்கும் பயன் கிடையாது என்பது உணரப்படவேண்டும் என்றும் அவதானிகள் சுட்டிக்காட்டியிருக்கிறார்கள். 

( வீரகேசரி இணையத்தள ஆய்வுத் தளம் )