வவுனியாவில் இந்தியாவிலிருந்து திரும்பி அழைக்கப்பட்ட முன்னாள் போராளிகளுக்கு  100 வீட்டுத்திட்டம் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக  வவுனியா கள்ளிக்குளம், சிதமப்பரம் கிராமத்தில் நேற்று இடம்பெற்ற கிராம சக்தி ஆரம்ப நிகழ்வில் பிருதம விருந்தினராக கலந்து கொண்ட பிரதேச செயலாளர் கா. உதயராசா   தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தனது உரையில்,

"கிராம சக்தி வேலைத்திட்டம் கடந்த ஒக்டோபர் மாதம் ஜனாதிபதி அவர்களினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து தற்போது நாடு முழுவதும் இவ் வேலைத்திட்டம் இடம்பெற்றுக்கொண்டிருக்கின்றது. ஜனாதிபதியின் சிந்தனையில் இந்த நாட்டிலிருந்து வறுமையை முற்று முழுதாக ஒழிக்கவேண்டும் எனத் தெரிவித்து அதற்கு ஒரு திட்டத்தினை வகுத்து இது ஒரு நீண்டகாலத்திட்டத்திற்கு அமைவாக 2030ஆம் ஆண்டளவிலே இது முடிவுறும். அதன் ஆரம்ப நிகழ்வே இன்று இடம்பெற்றுக்கொண்டுள்ளது.

துரதிஷ்ட வசமாக இந்த 30 வருட யுத்தத்தில் ஒரு தேங்கிய நிலை வந்துவிட்டது இல்லாவிட்டால் இலங்கை சிங்கப்பூர் போல வந்திருக்கும், அதேநேரம் சிங்கப்பூரில் அரச கரும மொழியாக தமிழ் காணப்படுகின்றது. சிங்கப்பூரை வளர்த்துவிட்டதே தமிழர்கள் தான் தற்போது ஜனாதிபதியாக கூட தமிழர் ஒருவரே இருக்கின்றார். அங்கு இருப்பவர்களைக் கேட்டாலே சொல்வார்கள் சிங்கப்பூரை வளர்த்துவிட்டது தமிழர்களே என்று அதேபோல சுவிஸ், லண்டன் எங்கு சென்று பார்த்தாலும் இன்று தமிழர்களே கோடீஸ்வரர்கள் இங்கு வாழ்கின்ற நாங்கள் மட்டும் கஷ்ட்டப்படுகின்றோம்.

இதைவிடக் கேவலமான விடயம் இந்தியாவில் போய் இருக்கின்றார்கள். இந்தியாவில் போய் இருப்பவர்களுக்கு எவ்வித முன்னேற்றமும் இல்லை, ஆகக்குறைந்தது  300 பட்டதாரிகளை உருவாக்கி இருக்கின்றார்களே தவிர இங்கிருந்து எவ்வாறு சென்றார்களோ அவ்வாறே அங்கும் இருக்கின்றார்கள்.

இங்கு வாருங்கள் என்று கூப்பிட்டால் கூட வருகின்றார்கள் இல்லை, ஆகவே எங்களுடைய மனப்பாங்கில் மாற்றங்கள் ஏற்படவேண்டும் நாங்கள் இந்த நாட்டு மக்களுடன் இணைந்து அபிவிருத்தியில் பங்கெடுத்து இந்த அரசாங்கத்திற்கு எங்களுடைய பங்களிப்பினை வழங்கி வறுமை நிலையிலிருந்து நாங்கள் முன்னுக்கு வரவேணடும். அதற்கான திட்டமே இது இந்தக்கிராமத்தினை அபிவிருத்தி அடைந்த கிராமமாக மாற்றவேண்டிய பொறுப்பு எங்களுக்கு இருக்கின்றது.

அடுத்த வருடமளவில் 100 வீடுகளை  அமைத்து முன்னாள் போராளிகளுக்கு அல்லது இந்தியாவிலிருந்து திரும்பியவர்களுக்கு வழங்க திட்டம் ஒன்று போடப்பட்டுள்ளது.  

ஒரு ஏக்கர் காணி உள்ளவர்களில் 50 பயனாளிகளை தருமாறும் அவர்களுக்கு முருங்கை செயற்றிட்டத்தில் உள்வாங்கி முருங்கை விதை தருவார்கள் அதை  விவசாயத்தின் பின்னர் பயனாளிகளிடமிருந்து  25 ரூபாவிற்கு கொள்முதல் செய்வார்கள்.

இச் செயற்றிட்டத்தில் ஆர்வமுள்ளவர்கள் கிராம அலுவலரிடம் பெயர் விபரங்களை வழங்கி முற் பதிவு செய்து கொள்ளுங்கள்" என தனது உரையில் தெரிவித்துள்ளார்.