தனது மனைவியை முச்சக்கரவண்டியில் அழைத்துச் சென்ற காதலர் மீது கணவர் கத்திரிக்கோலால் தாக்கிய சம்பவம் கொட்டாவை, மொரகெட்டிய பகுதியில் இடம்பெற்றுள்ளது.

வெளிநாட்டில் பணிபுரிந்த இத்தம்பதியர் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னர் நாடு திரும்பியிருந்தனர். குறுகிய காலப் பகுதியில் மனைவிக்கு இராணுவ வீரர் ஒருவருடன் காதல் ஏற்பட்டுள்ளது.

இதுபற்றித் தெரியவந்த கணவர், தன் மனைவி மீது பொலிஸில் கடந்த பதின்மூன்றாம் திகதி புகார் அளித்திருந்தார். அதுபற்றி விசாரிப்பதற்காக தம்பதியர் பொலிஸ் நிலையம் சென்றனர்.

விசாரணை முடிந்து வெளியேறிய மனைவி, பொலிஸ் நிலையத்துக்கு அருகில் நிறுத்தப்பட்டிருந்த முச்சக்கரவண்டியில் ஏறிச் சென்றார். அதில் அவரது காதலரும் இருந்ததைக் கண்ட கணவர் தனது மோட்டார் சைக்கிளில் துரத்திச் சென்றார்.

பன்னிப்பிட்டிய - ஹைலெவல் சந்தியில் வாகன நெரிசல் காரணமாக முச்சக்கரவண்டி நிறுத்தப்பட்டிருந்தது. அப்போது நடு வீதியில் மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு, தன் வசமிருந்த கத்தரிக்கோல் ஒன்றுடன் கோபத்துடன் சென்ற கணவர், மனைவியின் காதலரது வயிற்றில் பல முறை குத்தினார்.

இதைக் கண்ட மனைவி, காதலரைக் காப்பாற்றும் முயற்சியில், “திருடன், திருடன்” என்று மனைவி கூப்பாடு போட்டிருக்கிறார். அத்துடன், கணவரைத் தடுத்து நிறுத்தவும் முயற்சித்தார். இதனால் அவருக்கும் காயம் ஏற்பட்டது.

மனைவியின் கூச்சலைக் கேட்ட பொதுமக்கள் கணவரை சரமாரியாகத் தாக்கியதால் அவரும் கடும் காயங்களுக்கு உட்பட்டார்.

பின்னர், மூவரும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். சத்திர சிகிச்சை செய்ய வேண்டி காதலர் ஹோமாகமை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.