அவுஸ்ரேலியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையில் இடம்பெற்ற 2 ஆவது டெஸ்ட் போட்டி வெற்றி தோல்வியின்றி சமநிலையில் முடிவுக்கு வந்தது.

 

அவுஸ்ரேலியாவின் பேர்த் மைதானத்தில் கடந்த 12 ஆம் திகதி  ஆரம்பமான இரு அணிகளுக்குமிடையிலான 2 ஆவது டெஸ்ட் போட்டி ஆரம்பமானது.

நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்று முதலில் துடுப்படுத்தாட தீர்மானித்த அவுஸ்ரேலிய அணி தனது முதல் இன்னிங்ஸில் 9 விக்கட்டுக்களை இழந்து 559 ஓட்டங்கள் பெற்றவேளை தனது ஆட்டத்தை இடை நிறுத்திக்கொண்டது. இதில் டேவிட் வோனர் 253 ஓட்டங்களை எடுத்தார்.

மேலும், தனது முதலாவது இனிங்சை ஆரம்பித்த நியூசிலாந்து அணி சகல விக்கெட்டுக்களையும் இழந்து 624 ஓட்டங்களை குவித்தது. இதில் ரொஸ் டெய்லர் 290 ஓட்டங்களை எடுத்தார்.

இதையடுத்து 65 ஓட்டங்களால் பின்னிலை வகிக்க தனது 2 ஆவது இன்னிங்ஸை தொடங்கிய அவுஸ்திரேலிய அணி ஏழு விக்கட்டுக்களை இழந்து 385 ஓட்டங்களை பெற்று தனது 2 ஆவது இன்னிங்ஸை இடைநிறுத்திக் கொண்டது.

 

போட்டியின் 5 ஆம் நாளும் இறுதி நாளுமான இன்று 321 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு தனது 2 ஆவது இன்னிங்ஸை ஆரம்பித்த நியூசிலாந்து அணி இரு விக்கட்டுக்களை இழந்து 104 ஓட்டங்களை பெற்றிருந்த வேளையில் போட்டி வெற்றி தோல்வியின்றி முடிவுக்கு வந்தது.

இந்நிலையில் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 1-0 என அவுஸ்திரேலிய அணி முன்னிலையில் உள்ளது. இரு அணிகளுக்குமிடையிலான மூன்றாவதும் முக்கியமானதுமான டெஸ்ட் போட்டி எதிர்வரும் 27 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது,