நாட்டில் முன்னெடுக்கப்படும் அபிவிருத்திகளுக்கு உதவிகளை வழங்கும் நிகழ்ச்சியொன்றை ஐரோப்பிய ஒன்றியம்  அறிமுகம் செய்திருந்தது. 

மாகாணங்களில் வறுமை நிலையை குறைப்பதற்காக வறுமை நிலையில் வாழும் மக்களின் வருமானங்களை மேம்படுத்தும் நடவடிக்கைகளுக்காகவும், நெருக்கடியான நிலைகளிலும் அவர்களுக்கு அருந்துவதற்கு போதியளவு உணவு காணப்படுவதை உறுதி செய்யும் நடவடிக்கைகளுக்காகவும் 5.4 பில்லியன் ரூபாய்களை அன்பளிப்பு செய்ய ஐரோப்பிய ஒன்றியம் முன்வந்துள்ளது.

மத்திய மற்றும் ஊவா மாகாணங்களின் ஆளுநர்கள், முதல் அமைச்சர்கள் மற்றும் செயலாளர்கள் மத்தியில் இலங்கை மற்றும் மாலை தீவுகளுக்கான ஐரோப்பிய ஒன்றியத் தூதுக்குழுவின் தூதுவர் துங்லாய் மார்கியு கருத்துத் தெரிவிக்கையில், 

“வறுமை நிலையில் வாழ்பவர்களை கவனத்தில் கொண்டு இந்த நிகழ்ச்சித்திட்டத்தை நாம் அறிமுகம் செய்துள்ளோம். சிறந்த குடிநீர் மற்றும் கழிவறை வசதிகள் முதல் அவர்களின் தொழில்நுட்ப அறிவை மேம்படுத்துவது வரையான செயற்பாடுகளை முன்னெடுப்பதனூடாகவும், பெண்கள் வலுவூட்டும் செயற்பாடுகளினூடாகவும் இந்த பின்தங்கிய பிரதேசங்களைச் சேர்ந்த மக்கள் தமது வாழ்க்கை தராதரத்தில் குறிப்பிடத்தக்களவு உயர்வை அவதானிக்கக்கூடியதாக இருக்கும். 

இந்த நிகழ்ச்சித்திட்டத்தை முன்னெடுப்பதற்காக இலங்கை அரசாங்கம் மற்றும் சிவில் சமூக அமைப்புகள் சிலதுடன் கைகோர்ப்பதையிட்டு நாம் மகிழ்ச்சியடைகிறோம். 

இந்த பங்காண்மைகளினூடாக மக்களுக்கு வழங்கப்படும் உதவிகள், அவர்களின் வாழ்க்கையில் நிலைத்திருக்கும் மாற்றத்தை ஏற்படுத்தும் என கருதுகிறோம்” என்றார்.

இலங்கையின் கிராமிய அபிவிருத்திக்கான உதவி எனும் ஐரோப்பிய ஒன்றியத்தின் பரந்தளவு நிகழ்ச்சித்திட்டத்தின் அங்கமாக இந்த நன்கொடை அமைந்துள்ளதுடன், மொனராகலை, பதுளை, நுவரெலியா மற்றும் மாத்தளை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த கிராமிய சமூகத்தாருக்கு அனுகூலமளிப்பதாக அமைந்திருக்கும். 

2017 – 2022 வரையான ஐந்து ஆண்டுகளுக்கு இந்த நிகழ்ச்சித்திட்டம் அமுலில் இருக்கும். இந்த நிகழ்ச்சித்திட்டத்தை பின்வரும் ஐந்து பங்காளர்கள் அமைப்புகள் நடைமுறைப்படுத்தும், கிராமிய மற்றும் பெருந்தோட்ட சமூகங்களைச் சேர்ந்த பெண்கள் மற்றும் இளைஞர்களின் தலைமையின் கீழ் சிறு மற்றும் நடுத்தரளவு வர்த்தகங்களை உருவாக்குவதிலும் வலுவூட்டுவதிலும் பங்களிப்பு வழங்கும். மேலும், கிராமிய மற்றும் பெருந்தோட்ட மட்டங்களில் தொழில் உருவாக்கம், வியாபார அபிவிருத்தி மற்றும் பொருளாதார வளர்ச்சி தீர்மானமெடுத்தல்கள் போன்றவற்றில் அவர்களின் பங்குபற்றலை மேம்படுத்த ஊக்கமளிக்கும்.

தொழில் வாய்ப்புகளை ஏற்படுத்தல் மற்றும் விசேடமாக பெண்கள் தலைமைத்துவத்தில் இயங்கும் பாற்பண்ணை, பழங்கள், பூக்கள், மரக்கறிகள் மற்றும் வாசனைத்திரவியங்கள் போன்ற உள்ளூர் விவசாயசார் சிறு மற்றும் நடுத்தரளவு வர்த்தகங்களில் திறன் விருத்தி மற்றும் பெறுமதி சேர்த்தல் போன்றவற்றில் கவனம் செலுத்தும். மேலும், உள்ளூர் வியாபார உதவிச் சேவைகளுக்கு வலுவூட்டுவதனூடாக மற்றும் ஒன்றிணைக்கப்பட்ட, காலநிலை சார் மற்றும் உள்ளடக்கமான ஒழுங்கிணைப்பு செயன்முறைகள் மற்றும் பொருளாதார அபிவிருத்தி திட்டமிடல் மூலம் சிறு மற்றும் நடுத்தரளவு வியாபாரங்களுக்கு வியாபார செயற்படுத்தல் சூழலை இந்தத்திட்டம் ஊக்குவிக்கும்.

வருமானத்தை மேம்படுத்தல் மற்றும் தொழில் வாய்ப்புகளை வழங்குவது குறித்து கவனம் செலுத்தும். மேலும், பொருளாதார செயற்பாடுகளில் பெண்களை ஈடுபடுத்துவது குறித்தும் கவனம் செலுத்தும். இந்தச் செயற்பாடுகளில் கால்நடை சேவைகள் மற்றும் பாற்பண்ணை சந்தைகளை அதிகரித்தல், உருளைக்கிழங்கு விதைகள், கறுவா மற்றும் கொக்கோ உற்பத்தியை மேம்படுத்தல் போன்றன அடங்கியிருக்கும். தொழில் முயற்சியாளர்களுக்கு எவ்வாறு உதவிகளை வழங்குவது என்பது தொடர்பில் கொள்கைசார் தீர்மானமெடுத்தல்களில் உள்ளூராட்சி சபைகள் மற்றும் சிவில் சமூக அமைப்புகள் போன்றவற்றுக்கு பயிற்சிகளை வழங்குவதும் இந்தத்திட்டத்தினூடாக முன்னெடுக்கப்படும்.

கிராமிய மற்றும் பெருந்தோட்ட சமூகங்களுக்கு குடிநீர் மற்றும் கழிவறை வசதிகளை மேம்படுத்தல், பிரத்தியேக தூய்மையை மேம்படுத்தல் மற்றும் பொது அதிகார அமைப்புகளுக்கு வலுவூட்டும் வகையில் செயலாற்றும்.