(இராமேஸ்வரத்திலிருந்து ஆ.பிரபுராவ் )

இராமேஸ்வரம் மீனவர்களின் வேலை நிறுத்தப்போராட்டத்தால் சுமார் 75 ஆயிரம் பேர் வேலையிழந்துள்ளதுடன் மீன்பிடித் தொழில் முடக்கம் ஏற்பட்டு துறைமுகம் வெறிச்சோடியுள்ளது.   

இந்திய கடலோர காவல்படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த மீனவருக்கு உரிய நீதி வேண்டியும் துப்பாக்கிச் சூடு நடத்திய கடலோர காவல்படை அதிகாரிகளை கைதுசெய்ய வலியுறுத்தியும் இன்று ஒரு நாள் இராமேஸ்வரம் மீனவர்கள் அடையாள வேலை நிறுத்தம் மற்றும் நாளை இராமேஸ்வரம் பேருந்து நிலையத்தில் ஆர்ப்பாட்டம் மேற்கொள்கின்றனர். 

இன்று மேற்கொள்ளும்  மீனவர்களின் வேலை நிறுத்தப் போராட்டத்தால் சுமார் ஐந்து ஆயிரம் மீன்பிடி தொழிலாளர்களும் சுமார் 70 ஆயிரம் மீன்பிடி சார்பு தொழிலாளர்களும் வேலையிழந்துள்ளதோடு நாள் ஒன்றுக்கு சுமார் 1.50 கோடி ரூபா வர்த்தகம் பாதிப்புக்குள்ளாகியுள்ளது. 

இது தொடர்பில், மீனவர் விசைபடகு மீனவர்சங்கத்தின் தலைவர் எமரால்ட் தெரிவிக்கையில்,

 திங்கட்கிழமை கடலுக்கு சென்ற இராமேஸ்வரம் மீனவர்கள் மீது இந்திய கடலோர காவல் படை அதிகாரிகள் கொலை வெறி தாக்குதல் நடத்தியும் துப்பாக்கி சூடு நடத்தியதில் இரண்டு மீனவர்கள் காயம் அடைந்துள்ளனர். 

இந்த சம்பவத்தை கண்டித்து இன்று நாங்கள் ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம் மேற்கொள்வதோடு நாளை இராமேஸ்வரம் போருந்து நிலையத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளோம்.

மேலும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்காதப்பட்சத்தில் மிகப்பெரிய போராட்டம் நடத்தப் போவதாகவும் தெரிவித்துள்ளர்.

கடந்த காலங்களில் இலங்கை கடற்படையால் நாங்கள் கஷ்ட்டப்பட்டு வந்த நிலையில் தற்போது இந்திய கடலோர காவல் படையாலும் துன்பப்படும் நிலை ஏற்ப்பட்டுள்ளது. எனவே மத்திய மாநில அரசுகள் மீனவர் பிரச்சினையில் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்தார்.