கேரளாவில் இளைஞர் ஒருவர் பாகுபலி பாணியில் யானை மீது ஏற முயற்சித்தபோது அந்த யானையால் தூக்கி எறியப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பான காணொளி தற்போது  சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவி வருகிறது. 

கேரளாவின் இடுக்கி மாவட்டத்தைச் சேர்ந்த ஜினு ஜான் என்ற இளைஞர் பாகுபலி திரைப்படத்தில் வருவது போல் யானையின் தும்பிக்கையில் கால் வைத்து ஏற விரும்பியுள்ளார். அதற்காக அந்த யானைக்கு வாழைப்பழங்களை அளித்துள்ளார்.  இதனை ஜானின் உடன் வந்த நபர் காணொளி  பதிவு செய்துள்ளார்.

யானைக்கு வாழைப்பழம் அளித்ததையடுத்து, தன் சொல்லுக்கு அந்த யானை இசைவு கொடுப்பதாக நினைத்த அந்த இளைஞர் அதன் தும்பிக்கையின் மீது கால் வைத்து ஏற முயற்சி செய்துள்ளார்.

இதனால் கோபமடைந்த அந்த யானை, அந்த இளைஞரை 10 அடி தூரத்துக்கு தூக்கி எறிந்தது. இதில் நிலை குலைந்துபோன அந்த இளைஞர் அந்த இடத்திலேயே மயங்கி சுருண்டு விழுந்துள்ளார்.

தற்போது படுகாயமடைந்த நிலையில் உயிருக்கு போராடிவரும் ஜான் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.