மன்னார், பள்ளிமுனை மீனவர் ஒருவரின் பல இலட்சம் ரூபாய் பெறுமதியான பாறை மீன்களை கடற்படையினர் இன்று (14) காலை பறிமுதல் செய்தனர்.

மன்னார், பள்ளிமுனையைச் சேர்ந்த மீனவர் ஒருவர் நேற்று (13) திங்கட்கிழமை மாலை மீன் பிடிப்பதற்காக பள்ளிமுனை கடற்பகுதியில் இருந்து சக மீனவர்களுடன் கடலுக்குச் சென்றுள்ளார்.

அவர், இன்று காலை இரணைதீவு மேற்கு கடற்பகுதியில் உள்ள கடற்படை முகாமிற்கு சற்று தொலைவில் சுருக்கு வலையைப் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்டுள்ளார். இதன் போது தான் பிடித்த சுமார் 700 கிலோ பாறை மீன்களை பள்ளிமுனை கடற்கரைக்கு காலை 11 மணியளவில் கொண்டு வந்துள்ளார்.

அப்போது பள்ளிமுனை கடற்கரையில் இருந்த கடற்படையினர், டைனமெட் வெடிபொருளைப் பயன்படுத்தியே மீன்களைப் பிடித்ததாகக் கூறி அவற்றை கரைக்குக் கொண்டுசெல்ல அனுமதிக்கவில்லை.

இதை மறுத்த மீனவர், சுருக்கு வலையைப் பயன்படுத்தியே மீன்கள் பிடிக்கப்பட்டதாகக் கூறியதோடு, அங்கு வந்த மன்னார் மாவட்ட கடற்றொழில் திணைக்கள அதிகாரிகளிடம் மீன்களை வெட்டியும் காட்டியுள்ளார்.

அதை அலட்சியம் செய்த கடற்படையினர் மீனவர்களை அச்சுறுத்தியதோடு, பல இலட்சம் ரூபா பெறுமதியான 700 கிலோ பாறை மீன்களை மன்னார் மாவட்ட கடற்தொழில் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளனர்.

கடற்றொழில் திணைக்கள அதிகாரிகள் மீன்களை மன்னார் நீதிமன்றத்தில் ஒப்படைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

சட்டரீதியாக மீன்பிடிக்கும் தங்கள் மீது கடற்படையினர் இதுபோன்ற பொய்ப் புகார்களைக் கூறி தம் மீது முறைப்பாடுகளை பதிவு செய்வதாக மன்னார் மீனவர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.