ரி.விரூஷன்

யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றினால், காசோலை மூலமான கொடுக்கல் வாங்கள் மோசடி தொடர்பாக  வழங்கப்பட்ட தீர்ப்பான "கடன் பெற்றுக்கொள்ளப்பட நபர் மீள அப் பணத்தை கடன்  கொடுத்தவருக்கு செலுத்த  வேண்டும்" என்ற தீர்ப்பினை சட்ட ரீதியற்றது என தீர்பளித்துள்ள யாழ்.மேல் நீதிமன்றமானது  சட்ட முரணாக நடைபெறும் மணித்தியால,  நாள், மாத போன்ற சட்ட முரணான மீற்றர் வட்டி வியாபாரங்களுக்கு நீதிமன்றங்களில் பொய் சாட்சியம் சொல்லி நீதி பெறப்பட முடியாது எனவும் சுட்டிக்காட்டியுள்ளது.

மக்கள் வங்கி கிளையொன்றில் பணிபுரியும் நபரான வீரசிங்கம் சயந்தன் என்பவரிடம் தியேட்டருக்கு தேவையான பொருட்களை வாங்கித்தருமாறு கூறி அவரிடம் 47 இலட்சத்து 85ஆயிரம் ரூபா கொடுத்திருந்ததாகவும் ஆனால் அவர் தியேட்டர் பொருட்களை வாங்கி தராததுடன் பெற்றுக்கொண்ட பணத்தை மீள வழங்காது அதற்காக  ஐந்து காசோலைகளை வழங்கியதாகவும், அவற்றில் பணம் எதுவும் இல்லை என கூறி நபரொருவர் பொலிஸார் ஊடாக யாழ்.நீதிவான் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கானது யாழ்.நீதிவான் நீதிமன்றால் விசாரனை செய்யப்பட்டு எதிரியாக பெயர் குறிப்பிடப்பட்டிருந்த நபரான மக்கள் வங்கி ஊழியரை குற்றவாளி என தீர்ப்பளித்ததுடன் குறித்த நபர் முறைப்பாட்டாளருக்கு 47 இலட்சத்து 85ஆயிரம் ரூபாவினையும் மீள செலுத்த வேண்டும் எனவும் அவ்வாறு செலுத்த தவறின்  இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை  அனுபவிக்க வேண்டும் எனவும்  தீர்பளித்திருந்தது.

இத் தீர்ப்புக்கு எதிராக யாழ்.மேல் நீதிமன்றில் மேன்முறையீடு செய்யப்பட்டிருந்தது. இதனையடுத்து அம் மேன்முறையீட்டு மனுவானது, யாழ்.மேல் நீதிமன்றினால் விசாரணை செய்யப்பட்டு அதற்கான தீர்ப்பானது இன்றைய தினம் வழங்கப்பட்டிருந்தது.

மேலும் நீதிபதி இளஞ்செழியன் தனது தீர்ப்பில் குறிப்பிட்டிருப்பதாவது,

"மணித்தியால வட்டி, நாள் வட்டி போன்ற சட்ட முரணான செயற்பாடுகளை உடனடியாக அனைவரும் நிறுத்த வேண்டியதுடன் அவற்றுக்கு நீதிமன்றங்களில் பொய் சாட்சி சொல்லி நீதி பெற முடியாது. கடன் வழங்கும் நிதி நிறுவனங்கள் மத்திய வங்கியில் பதிவு செய்ய வேண்டும். மத்திய வங்கியில் பதிவு செய்யாத நிறுவனங்கள் அனைத்தும் சட்ட முரணான நிதி நிறுவனங்களாகும். மத்திய வங்கியில் பதிவு செய்யப்பட்ட நிறுவனங்களை மேற்பார்வை செய்ய வேண்டியது மத்திய வங்கி ஆளுநரின் கடமையாகும். எந்த நிதி நிறுவனங்கள் மீற்றர் வட்டி, பிரமிட் வட்டி அறவிடுகின்றன என்பது தொடர்பாக கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டியது மத்திய வங்கி ஆளுநரின் கடமையாகும்" என குறிப்பிட்டார்.

இதனடிப்படையில், இந்த வழக்கில் முறைப்பாட்டாளருக்கு 47 இலட்சத்து 85 ஆயிரம் ரூபா செலுத்துமாறு எதிரிக்கு நீதிவான் நீதிமன்றம் இட்ட தீர்ப்பானது சட்டரீதியானதல்ல, குறித்த தீர்ப்பை ரத்து செய்து இந்த மன்று தீர்ப்பளிக்கின்றது. ஆனால் குறித்த எதிரியான மக்கள் வங்கி உத்தியோகத்தருக்கு இரண்டாண்டுகள் கடூழிய சிறைத் தண்டனை விதித்து தீர்பளிப்பதாகவும், இத் தண்டணை காலமானது நீதிவான் நீதிமன்ற தீர்ப்பு திகதியில் இருந்து அமுலுக்கு வருவதாகவும் யாழ் மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் தனது தீர்ப்பில் குறிப்பிட்டிருந்தார்.