அம்பலாந்தோட்டை, கொக்கல்லயில் இன்று (11) அதிகாலை பொலிஸாருடன் இடம்பெற்ற துப்பாக்கிச்  சமரில் சந்தேக நபர் ஒருவர் பலியானார்.

கொக்கல்ல, லைம சந்தியில் இன்று அதிகாலை பொலிஸார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அந்த வழியாக சிறு லொறியொன்று வந்தது. அதை நிறுத்துமாறு பொலிஸார் சைகை காட்டினர்.

ஆனால், லொறியை நிறுத்துவதற்குப் பதிலாக, லொறியின் உள்ளேயிருந்த நபர் பொலிஸார் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளார். இதையடுத்து பொலிஸாரும் துப்பாக்கிப் பிரயோகம் செய்துள்ளனர்.

பின்னர், குறித்த லொறியைத் தேடிச் சென்ற பொலிஸார், சம்பவம் இடம்பெற்ற இடத்தில் இருந்து சுமார் இரண்டரை கிலோ மீற்றர் தொலைவில் ஒருவர் இறந்து கிடந்ததைக் கண்டனர். அவர் லொறியில் இருந்து துப்பாக்கிப் பிரயோகம் செய்தவர் என்று அடையாளம் காணப்பட்டார்.

அவருக்கு அருகே பெருந்தொகை வாழைத் தார்கள் கிடந்ததையும் பொலிஸார் கண்டனர்.

இதனிடையே, அம்பலாந்தோட்டை நீதிமன்றில் லொறியின் சாரதியும் மற்றொருவரும் சட்டத்தரணியின் உதவியுடன் சரணடைந்தனர்.

அவர்களை விசாரித்தபோது, வாழைத் தார்களைத் திருடிச் சென்றபோதே பொலிஸார் வழிமறித்ததாகவும், பிடிபட்டுவிடுவோம் என்ற பயத்தில் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும், பொலிஸாரின் சூட்டுக்கு இலக்காகிய சகாவையும் வாழைத் தார்களையும் சற்றுத் தொலைவில் இறக்கிவிட்டுத் தப்பிச் சென்றதாகவும் தெரிவித்துள்ளனர்.