மியன்மார் நாட்டில் ட்ரோன் கெமரா மூலம் அந் நாட்டு பாராளுமன்றை படமெடுத்த இரண்டு வெளிநாட்டு பத்திரிகையாளர்கள் உட்பட 4 பேருக்கு அந்நாட்டு நீதிமன்றம் 2 மாதம் சிறை தண்டனை விதித்துள்ளது. 

துருக்கியை சேர்ந்த டி.ஆர்டி உலகம் செய்தி தொலைக்காட்சிக்காக மியான்மர் குறித்து ஆவணப்படம் ஒன்றை தயாரிக்க இரண்டு பத்திரிகையாளர்கள் வந்துள்ளனர்.

இவர்களுக்கு உதவியாக மியான்மர் நாட்டை சேர்ந்த மொழிபெயர்ப்பாளர் ஒருவர் மற்றும் வாகன ஓட்டுனரும் சென்றுள்ளனர்.

மலேசியாவை சேர்ந்த பத்திரிகையாளர் "மோக் சோய் லின்" மற்றும் சிங்கப்பூரை சேர்ந்த "கேமராமேன் லாவ் ஹான் மெங்"  ஆகிய இருவரும் கடந்த மாதம் 27ஆம் திகதி ட்ரோன் திகதி மூலம் மியான்மர் பாராளுமன்றை  படம் பிடித்துள்ளனர்.

இதனை அடுத்து பத்திரிகையாளர்கள் மற்றும் அவர்களுக்கு உதவியாக வந்த இருவரையும் பொலிஸார் கைது செய்து விளக்கமறியலில் வைத்துள்ளனர்.

இவர்கள் மீது  குடிவரவு - குடியகல்வு சட்டத்தை மீறியதாக குற்றம் சுமத்தப்பட்டு, 1934 பர்மா விமான சட்டத்தின் கீழ் குறித்த 4 பேருக்கும் 2 மாதம் சிறைத்தண்டனையை அந் நாட்டு நீதி மன்றம் விதித்துள்ளது. 

குடிவரவு - குடியகல்வு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுத்திருந்தால் 3 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை கிடைத்திருக்கும் என அந் நாட்டு அரச தரப்பு வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது

அபராதம் மட்டுமே போடுவார்கள் என நினைத்து பத்திரிகையாளர்கள் நாடாளுமன்றத்தை படம் பிடித்துள்ளனர். ஆனால் அவர்கள் எதிர்பாராத வகையில் இவ்வாறு நடந்துள்ளது என பத்திரிகையாளர்கள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் தெரிவித்தார்.

தங்களுக்கு தெரியாத பர்மா மொழியில் இருந்த ஆவணங்களில் கையெழுத்து வாங்கியதாகவும், குடும்பத்தினருடன் பேச தங்களை அனுமதிக்கவில்லை என்றும் பத்திரிகையாளர் மோக் சோய் லின் குற்றம் சாட்டியுள்ளார்.

ஏற்கனவே ரோஹிங்கியா விவகாரத்தில் மியான்மர், துருக்கி இடையே சிறு கருத்து மோதல் உள்ளது. இந்த நிலையில் அந்நாட்டு செய்தி தொலைக்காட்சிக்காக பணி புரிந்து வந்த இரண்டு பேர் கைது செய்யப்பட்டிருப்பது புதிய பிரச்னையை ஏற்படுத்தலாம் என கருதப்படுகிறது.