ஸ்ரீலங்கா எயார்லைன்ஸுக்கு எந்தவொரு நிதி ஒதுக்கீடுகளையும் செய்யவில்லை. இனிமேல் அதன் சுமையை அரசாங்கத்தினால் சுமக்க முடியாது என நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்தார்.

எயார் லைன்ஸ் நிறுவனத்தினை இலாபமீட்டுவதற்கான முயற்சிகள் நடக்கின்றன. பல்வேறு நாடுகளுடன் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு வருகின்றன. எனினும் இது எவ்வளவு சாத்தியம் என்று தெரியாது. முடியாதபோது வேறு வழிக்கு செல்ல வேண்டி வரும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

2018ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்டம் குறித்து விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அடுத்த ஆண்டுக்காக முன்வைக்கப்பட்டுள்ள வரவு செலவுத்திட்ட யோசனைகளை நடைமுறைப்படுத்துவதற்கும் அதன் செயற்பாட்டு திறனை ஆராயவும் புதிய பிரிவொன்றை ஸ்தாபிக்கத் திட்டமிட்டுள்ளதாகவும் அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்தார்.