தியகம மஹிந்த ராஜபக்ஷ விளையாட்டரங்கில் இன்று நிறைவுபெற்ற 48 ஆவது ரிட்ஸ்பரி சேர் ஜோன் டாபட் கனிஷ்ட மெய்வல்லுநர் போட்டிகளில் ஆண்கள் பிரிவில் மருதானை புனித சூசையப்பர் கல்லூரி 62 புள்ளிகளுடனும், பெண்கள் பிரிவில் நாவல ஜனாதிபதி மகளிர் கல்லூரி 62 புள்ளிகளுடனும் ஒட்டுமொத்த சம்பியன்களாகின.

பலப்பிட்டி சித்தார்த்த மத்திய மகா வித்தியாலய வீரர் எம். அபேசேகர (நீளம் பாய்தல் 6.52 மீ.) 820 புள்ளிகளைப் பெற்று அதி சிறந்த கனிஷ்ட ஆண்  மெய்வல்லுநரானார்.

திக்வெல்ல விஜித்த மத்திய கல்லூரி வீராங்கனை சாதினி கவீஷா (நீளம் பாய்தல் 5.47 மீ.) 884 புள்ளிகளைப் பெற்று அதி சிறந்த கனிஷ்ட பெண் மெய்வல்லுநரானார்.

ஆண்கள் பிரிவில் 48 புள்ளிகளுடன் .மாத்தறை ராகுல கல்லூரியும்  பெண்கள் பிரிவில் 47 புள்ளிகளுடன் இரத்தினபுரி சுமனா மகளிர் வித்தியாலயமும் ஒட்டுமொத்த இரண்டாம் இடங்களைப் பெற்றன.

400 மீற்றர் ஓட்டப் போட்டியில் இருபாலாரிலும் அதிசிறந்த மெய்வல்லுநராக நாவல ஜனாதிபதி மகளிர் வித்தியாலயத்தின் எஸ். எதிரிசிங்கவும் நீளம் பாய்தலில் இருபாலாரிலும் அதிசிறந்த மெய்வல்லுராக திக்வெல்ல விஜத்த மத்திய கல்லூரியின் சாதினி கவீஷாவும் தெரிவாகினர்.

12, 13, 14, 15 ஆகிய வயதுகளுக்குட்பட்ட பிரிவுகளில் நடைபெற்ற இப் போட்டிகளில் ஒவ்வொரு வயதுப் பிரிவிலும் இருபாலாருக்கும் முதலாம், இரண்டாம் இடங்களுக்கான கிண்ணங்கள் வழங்கப்பட்டன.

தொடர் ஓட்டப் போட்டிகளில் ஆண்கள் பிரிவில் நீர்கொழும்பு மாரிஸ் ஸ்டெல்லா கல்லூரி 27 புள்ளிகளுடனும் பெண்கள் பிரிவில் சிலாபம் கார்மேல் மகளிர் வித்தியாலயம் 67 புள்ளிகளுடனும் சம்பியன் பட்டங்களை வென்றன.

மூன்று தினங்கள் நடைபெற்ற இப் போட்டிகளில் மொத்தமாக 22 புதிய சாதனைகள் நிலைநாட்டப்பட்டதுடன் 2 சாதனைகள் சமப்படுத்தப்பட்டன.