இராணுவத்தால் பலவந்தமாகக் கையகப்படுத்தப்பட்டுள்ள கேப்பாபுலவு மக்களுக்குச் சொந்தமான 73 ஏக்கர் காணிகளை வாக்குறுதி அளித்ததன் பிரகாரம் அந்த மக்களிடமே வழங்குவதற்கு உடன் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென வலியுறுத்தி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதம ரணில் விக்கிரமசிங்க ஆகியோருக்கு எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் அவசர கடிதம் அனுப்பியுள்ளார்.

காணிகளை மீளப் பெற்றுக்கொள்வதற்காக கேப்பாபுலவு காட்டிவரும் துணிச்சலான உறுதிப்பாட்டின் அடிப்படையில், காணிகளை மீளப்பெறும் சட்டபூர்வமான அவர்களது உரிமையை மறுப்பது இன நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதில் பாரிய தடையாக அமையும்.  இது இன நல்லிணக்கத்துக்குப் பாரியளவில் பொதுவான தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இக்கடிதத்தின் பிரதிகள் அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன், பாதுகாப்பு அமைச்சு, பாதுகாப்புச் செயலாளர், இராணுவ தலைமைக் கட்டளை அதிகாரி ஜெனரல் மகேஸ் சேனாநாயக்க ஆகியோருக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.