அனைத்துலக அளவில் பரந்து கிடக்கும் உலகத் தமிழர்களின் இளையோரிடையே தலைமைத்துவ திறனை வளர்க்கும் நோக்கினை இலக்காகக் கொண்டு கல்லூரி மற்றும் பல்கலைக்கழக மாணவர்களுக்கான 2 ஆவது அனைத்துலக "பேசு தமிழா பேசு" பேச்சுப் போட்டி இலங்கையின் கொழும்பு நகரில் நடைபெறவுள்ளது.

இந்த மாபெரும் இறுதிச் சுற்றுப் போட்டி எதிர்வரும் நவம்பர் 12 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணி தொடங்கி மாலை 5 மணி வரையில் கொழும்பு, ஸ்டேன்ஸி விஜய சுந்தர மாவத்தையிலுள்ள நாடா அரங்கில் நடைபெறவிருக்கிறது. மலேசியாவின் ஆஸ்டோ வானவில் தொலைக்காட்சியும் வணக்கம் மலேசியாவும் இணைந்து " பேசு தமிழ பேசு" எனும் அனைத்துலக போட்டியை நடத்தி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. 

முதலாவது அனைத்துலக போட்டி கடந்த ஆண்டு சென்னையில் வெகு சிறப்பாக நடந்தது. இப் போட்டியில் கலந்து கொண்ட இந்தியா, சிங்கப்பூர், மலேசியா, மியன்மார் மற்றும் இலங்கை ஆகிய நாடுகளைச் சேர்ந்த மாணவர்களின் அனல் தெறிக்கும் பேச்சுகளால் அரங்கம் அதிர்ந்தது. இந்த மாபெரும் இறுதிச் சுற்றில் மலேசியாவில் சிவராஜ் லிங்கராஜ் முதலிடத்தை வென்ற வேளையில் இலங்கையின் சுதாகர் பாலன் இரண்டாம் இடத்தை வென்றார். இந்தியாவின் சரவணன் கோபால் மற்றும் மலேசியாவின் கலைச் செல்வி ரத்னம் ஆகியோர் மூன்றாவது வெற்றியாளராக தேர்வு பெற்றனர். 

சென்னையில் நடந்த முதலாவது போட்டியில் சுதாகரன் பாலன், பிரியதர்ஷினி, வின்சண் மற்றும் காயத்திரி ஜெயவதனன் ஆகியோர் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி கலந்து கொண்டனர். இம்முறை இரண்டாவது அனைத்துலக பேச்சு தமிழா பேச்சு 2017 பேச்சுப் போட்டி, இலங்கையை மண்ணில் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

ஆற்றல் மிகுந்த இளம் பேச்சாளர்களின் அதிரடி களமாக மீண்டும் இப் போட்டி அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. உலகத் தமிழர்களின் இளைய தலைமுறைப் பேச்சாளர்கள் ஒரே அரங்கில் ஒன்று திரளவிருக்கின்றனர்.  அவர்களின் பேச்சுத்திறனை, கருத்து மோதலை, விவாத வீச்சினைக் காண இலங்கை தமிழ் ஆர்வலர்கள் அனைவரம் திரளாக கலந்து கொண்டு சிறப்பிக்கும்படி ஏற்பாட்டாளர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.