தற்போதைய அரசாங்கமானது தனது அரச கொள்கையில் பிள்ளைகளின் கல்விக்கே அதிக முன்னுரிமை அளித்துள்ளதுடன் கடந்த வருடங்களைப் போன்றே இவ்வருட வரவுசெலவு திட்டத்திலும் கல்விக்கு அதிக நிதியை ஒதுக்கியுள்ளதென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

இன்று முற்பகல் மொரட்டுவ பிரின்சஸ் ஒஃப் வேல்ஸ் வித்தியாலயத்தின் வருடாந்தப் பரிசளிப்பு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன மேற்கண்டவாறு தெரிவித்தார்.

நாட்டில் அதிகளவிலான கல்விமான்களையும் புத்திஜீவிகளையும் உருவாக்குவதே நாட்டின் எதிர்காலத்திற்கு முக்கியமானதாகும் எனத் தெரிவித்த ஜனாதிபதி, கல்வி நடவடிக்கைகளில் எவ்வித குறைபாடுகளும் ஏற்படாதவாறு அனைத்து வளங்களையும் பெற்றுக்கொடுத்தல் அவசியமாகும் என்றும் இதன்போது வலியுறுத்தினார்.

இன்று முற்பகல் மொரட்டுவ பிரின்சஸ் ஒஃப் வேல்ஸ் வித்தியாலயத்திற்கு விஜயம் செய்த ஜனாதிபதியை மாணவிகள் அன்புடன் வரவேற்றனர்.

சிறப்பான திறமைகளை வெளிக்காட்டிய மாணவிகளுக்கு ஜனாதிபதி அவர்கள் இதன்போது

பரிசில்களை வழங்கி வைத்ததுடன், ஆசிரியர்களும் இதன்போது கெளரவிக்கப்பட்டனர். 

கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம், இராஜாங்க அமைச்சர் எரான் விக்கிரமரத்ன ஆகியோரும் பாடசாலையின் அதிபர் மாலனி சமரக்கோன், ஆசிரியர்கள், பெற்றோர், பழைய மாணவர்கள் உள்ளிட்ட பெருந்திரளானோர் இந்த நிகழ்வில் பங்குபற்றினர்.

மொரட்டுவ மெதடிஸ்த கல்லூரியின் வருடாந்த பரிசளிப்பு நிகழவும் இன்று முற்பகல் ஜனாதிபதியின் தலைமையில் இடம்பெற்றது.

மொரட்டுவ மெதடிஸ்த கல்லூரிக்கு இன்று முற்பகல் விஜயம் செய்த ஜனாதிபதி மாணவர்கள் அன்புடன் வரவேற்றனர்.

கல்லூரியின் 175 ஆவது ஆண்டினை முன்னிட்டு நினைவு முத்திரையும் இதன்போது வெளியிடப்பட்டது.

இவ்வருட புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்கள், க.பொ.த சாதாரண தரம் மற்றும் உயர் தரத்தில் சித்தியடைந்தவர்களும் விளையாட்டுத்துறைகளில் திறமைகளை வெளிக்காட்டியவர்களும் பாராட்டப்பட்டு ஜனாதிபதியால் இதன்போது பரிசில்கள் வழங்கப்பட்டன.

நிகழ்வில் உரையாற்றிய ஜனாதிபதி, பிள்ளைகளுக்கான சிறந்த எதிர்காலத்தை உருவாக்குவதற்காக அரசாங்கம் சகல பொறுப்புக்களையும் நிறைவேற்றி வருவதுடன் இலட்சியமும் தன்னம்பிக்கையும் மிக்கவர்களாக பரீட்சைகளையும் வாழ்க்கையையும் வெற்றிகொள்ள பிள்ளைகள் முயற்சிக்க வேண்டுமெனவும் தெரிவித்தார்.

தற்போது சமூகத்தில் பாரிய சிக்கலை தோற்றுவித்துள்ள போதைப் பொருட்களின் பிடியிலிருந்து பிள்ளைகளை பாதுகாப்பதற்கு அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்படுகின்றதென வலியுறுத்திய ஜனாதிபதி அவர்கள், சமூகத்தில் அனைவரும் இதற்கான தமது பொறுப்புக்களை நிறைவேற்ற வேண்டியதன் அவசியம் குறித்தும் சுட்டிக்காட்டினார்.

கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் இராஜாங்க அமைச்சர் எரான் விக்கிரமரத்ன, மேல் மாகாண கல்வி அமைச்சர் ரஞ்சித் சோமவங்ச, பாடசாலையின் அதிபர் நிலந்தி பெரேரா, ஆசிரியர்கள், பெற்றோர் மற்றும் பழைய மாணவர்கள் உள்ளிட்ட பெருந்திரளானோர் இந்த நிகழ்வில் பங்குபற்றினர்.