மாணவர்களின் கல்விச் செயற்பாடுகளை அபிவிருத்தி செய்யும் வகையில், அடுத்து கல்வியாண்டில் குறிப்பிட்ட சில மாற்றங்களைச் செய்யவுள்ளதாக பிரதி கல்வியமைச்சர் வே.இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

இசுறுபாயவில் தற்போது நடைபெற்று வரும் ஊடகவியலாளர் சந்திப்பொன்றின்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

“நாட்டின் அனைத்துப் பாடசாலை மாணவர்களின் கற்றல் செயற்பாடுகளிலும், தேவைக்கேற்ப பல மாற்றங்களைச் செய்வதற்கு கல்வியமைச்சு திட்டமிட்டுள்ளது. அதன்படி, வடக்கு, கிழக்கு மாகாண மற்றும் தோட்டப் பாடசாலை மாணவர்களின் கல்வி அபிவிருத்தியை நோக்காகக் கொண்டு புதிய கொள்கைகள், வேலைத்திட்டங்கள், செயற்றிட்ட ஆக்கங்கள், பின்னூட்டல்கள் மற்றும் மதிப்பீடுகள் என்பன நடத்தப்படவுள்ளன.

“சர்வதேசப் பாடசாலைகளின் நடவடிக்கைகள், தேசியப் பாடசாலைகளின் கல்விக் கொள்கைகளுக்கு அமைவாக இருப்பதையும் கல்வியமைச்சு உறுதி செய்யவுள்ளதுடன், அது குறித்து தொடர் மேற்பார்வை செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளது.

“மேலும், விசேட தேவையுடைய மாணவர்களின் வசதி குறித்தும் கவனம் எடுக்கப்படவுள்ளது. நாடெங்கும் கல்விச் செயற்பாட்டில் ஈடுபட்டிருக்கும் விசேட தேவையுடைய மாணவர்கள், அவர்களது கல்வியைத் தடையின்றிப் பெற்றுக்கொள்வது உறுதிசெய்யப்படவுள்ளது.

“நாடெங்கிலும் உள்ள பாடசாலைகளில் தேசிய மற்றும் இணைப்பு மொழிக் கல்வியை மேம்படுத்தும் நடவடிக்கைகளும் எடுக்கப்படவுள்ளன.

“தமிழ் மொழி ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களின் வேலைத் திட்டங்களும் தொடர் மேற்பார்வைக்கு உட்படுத்தப்படவிருக்கின்றன.

“இவையனைத்தும், கல்வியமைச்சு மற்றும் கல்வி நடவடிக்கைகளுடன் தொடர்புடைய ஏனைய நிறுவனங்களின் ஒத்துழைப்புடன் மேற்படி திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படும்.”

இவ்வாறு பிரதியமைச்சர் வே.இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.