கர்ப்பப்பை என்பது பெண்களின் இனப்பெருக்க தொகுதியின் ஒரு முக்கிய உறுப்பு. இது பெண்களின் அடிவயிற்று பகுதியில் காணப்படும். கர்ப்பப் பையின் இரு புறமும் ஒவ்வொரு சூலகம் அமைந்திருக்கும்.
கர்ப்பப் பையின் உட்சுவர் பகுதி என்டோமெற்றியம் (Endometrium) என்ற இழையத்தினால் மூடப்பட்டிருக்கும் கர்ப்பப் பையின் வெளிசுவர் பகுதி தடித்த தசைப் பகுதியினால் ஆனது. இதனை மயோமெற்றியம் (Myometrium) என அழைக்கப்படும். இந்த தசைப் பகுதியிலே ஏற்படும் கட்டிகளை பைவுரோயிட் (Fibroids) கட்டிகள் என அழைக்கப்படும். இந்த கட்டிகள் மிகச்சிறிய மாபிள் சைசில் அல்லது மிக மெதுவாக வருடக் கணக்கில் வளர்ந்து மிகப் பெரிய கட்டிகளாக காணப்படும். மிகப் பெரிய கட்டிகளாக வரும்போது இவை பிரச்சினைகளை தோற்றுவிக்கின்றன. இந்த Fibroids கட்டிகள் புற்றுநோய் அல்லாத கட்டிகள்.
பொதுவாக இந்த கட்டிகள் கர்ப்பப் பையின் தசைச்சுவர் பகுதியிலேயே உருவாகும் சில கட்டிகள் கர்ப்பப் பையின் உள்பகுதியை நோக்கி வளர்ந்திருக்கும் சில கர்ப்பப் பையில் இருந்து வெளிநோக்கி வளர்ந்திருக்கும்.
பைவுரோயிட் (Fibroids) ஒரு பொதுவான பிரச்சினையா?
பெண்களின் இனப்பெருக்க தொகுதியில் ஏற்படக் கூடிய பொதுவானதும் கூடுதலானதுமான பிரச்சினையே இந்த பைவுரோயிட் (Fibroids). அதாவது 50 வயதுக்கு கீழ்பட்ட 5 பெண்களை எடுத்தால் அதில் ஒருவருக்கு கட்டாயம் (Fibroids) காணப்படும். அதுவும் 40 வயதுக்கு கிட்டவுள்ள பெண்களில் இது கூடுதலாக காணப்படும். அத்துடன் கர்ப்பமே தரிக்காமல் இருக்கும் பெண்களிலேயே இது கூடுதலாக காணப்படும் ஒரு பிரச்சினை.
இந்த பைவுரோயிட் எதனால் ஏற்படுகிறது?
இது எதனால் ஏற்படுகிறது என்று சரியாக கூற முடியாவிட்டாலும் இவை வளர்வது மாதவிடாய் முடிந்ததும் அதாவது மெனோபோஸ் (Menopause) பருவம் வந்தவுடன் தடைப்பட்டு விடும். அதாவது மெனோபோஸ் பருவத்தின் பின் இந்த பைவுரோயிட்கள் சுருங்கி போய் விடுகின்றன. இதனால் இவை சூலகத்தினால் சுரக்கப்படும் ஹோர்மோன் (Hormone) ஈஸ்ரஜன் (Oestrogen) தூண்டுதலால் தான் வளர்கிறது. மெனோபோஸ் (Menopause) பருவத்தின் பின்னர் சூலகங்கள் ஈஸ்ரஜன் சுரப்பதில்லை. இதனால் பைவுரோயிட்கள் வளருவதும் இல்லை. பைவுரோயிட்கள் கர்ப்பிணி காலங்களில் நன்றாக வளருகின்றன காரணம் கூடுதலான அளவில் ஈஸ்ரஜன் (Oestrogen) உடம்பில் இருப்பதனால் இந்த கட்டிகள் பரம்பரையாக தோன்றக்கூடிய ஒரு பிரச்சினை. அதாவது தாய்க்கோ அல்லது பெண் சகோதரிக்கோ இருந்தால் பிள்ளையிலும் இந்த பிரச்சினை தோன்றக்கூடிய வாய்ப்புள்ளது.
என்ன நோய் அறிகுறிகள் ஏற்படுகின்றன?
கூடுதலானவர்கிளல் எந்த நோய் அறிகுறிகளும் வெளிப்படுவதில்லை. இதனால் அவர்களுக்கு பைவுரோயிட் (Fibroids) இருப்பது தெரியாமலே இருந்து விடுகிறது. அவர்களை பரிசோதிக்கும் போதே தற்செயலாக கண்டுபிடிக்கப்படுகிறது. நோய் அறிகுறிகள் இந்த கட்டிகள் பெரிதாக வளரும்போது தோற்றுவிக்கப்படுகிறது. அதாவது வயிற்றில் ஒருவிதமாக பாரம் மற்றும் வயிறு ஊதல் போன்றன சிலரில் ஏற்படும். இன்னும் ஒரு சிலரில் அதிகப்படியான மாதவிடாய் போக்கு அதாவது மாதவிடாய் கட்டி கட்டியாக குருதி வெளியேற்றம் ஏற்பட வாய்ப்புள்ளது. இதன்போது வயிற்று வலியும் ஏற்படும். இவ்வாறான அதிகப்படியான குருதிப் போக்கினால் அவரது உடலில் இரத்த அளவு குறைந்து குருதிச் சோகை (Anoenia) ஏற்படும். இதனால் களைப்பும் சோர்வும் ஏற்படும். இந்தக் கட்டிகள் பொதுவாக வயிற்று வலியை தோற்றுவிக்காது . ஆனால் ஒரு சிலரில் மட்டும் நாரி பிடிப்பு, அடிவயிற்றுவலி என்பன ஏற்படும். இந்த கட்டிகள் மிகப் பெரிதாக வளர்ந்து அருகில் உள்ள உறுப்புகளை அமத்துவதனால் சிறுநீர் கழிப்பதில் சிக்கல், மலம் கழிப்பில் சிக்கல் ஏற்பட சந்தர்ப்பம் உள்ளது. இந்த (Fibroids) கட்டிகள் கருத்தரித்தலை தாமதப்படுத்தி குழந்தை பாக்கியத்தை இல்லாத தன்மையை ஏற்படுத்த வாய்ப்புள்ளது. இப்படியான இதன் அறிகுறிகள் உங்களுக்கு இருந்தால் நீங்கள் வைத்திய ஆலோசனையை பெறுவது சிறந்தது.
எவ்வாறு பைவுரோயிட் கட்டிகள் கண்டுபிடிக்கப்படும்?
பொதுவாக இவை தற்செயலாக கண்டு பிடிக்கப்படுகிறது. அதாவது உங்களது வைத்தியர் உங்களை பரிசோதிக்கும்போது உங்கள கர்ப்பப்பை வீங்கி இருப்பதில் இருந்து கட்டி இருப்பதாக சந்தேகிப்பர். பின்னர் ஒரு ஸ்கான் (Ultrasound Scan) செய்யும் போது இவை உறுதிப்படுத்தப்படும். கட்டிகளின் எண்ணிக்கை கட்டியின் அளவு என்பவை ஸ்கான் மூலம் அறிந்து கொள்ளலாம்.
எவ்வாறான சிகிச்சைகள் மேற்கொள்ளப்படுகின்றன?
சிகிச்சைகள் நோய் அறிகுறிகளை பொறுத்து தீர்மானிக்கப்படுகின்றன. அதாவது இரண்டு முறையான சிகிச்சை முறைகள் உள்ளன. மருந்துகள் மூலம் குணப்படுத்தல் மற்றும் சத்திர சிகிச்சைகள் மேற்கொள்வதே இந்த இரண்டு முறைகள் ஆகும்.
இந்தக் கட்டிகள் சிறிதாகவும் நோய் அறிகுறிகளை தோற்றுவிக்காமலும் இருந்தால் உங்ளுக்கு எந்த சிகிச்சையுமே தேவையில்லை. ஆனால் நீங்கள் பின்னர் சிறிது காலத்தின் பின்னர் வைத்திய பரிசோதனை மேற்கொண்டு பார்க்க வேண்டும்.
நோய் அறிகுறிகளை தோற்றுவிக்கும் கட்டிகள் அல்லது பெரிதாக வளர்ந்துள்ள கட்டிகள் சிகிச்சை தேவையானவை. சிகிச்சை முறை உங்களது வயது நீங்கள் மீண்டும் குழந்தை பெறும் எண்ணம் உள்ளவரா? மற்றும் உங்கள் நோய் அறிகுறிகளின் உக்கிரம் என்பவற்றுடன் உங்களது தனிப்பட்ட விருப்பம் என்பனவற்றை கருத்தில் கொண்டு தீர்மானிக்கப்படும்.
எவ்வாறான சத்திர சிகிச்சைகள் உள்ளன?
இரண்டு வகையான சத்திர சிகிச்சை முறைகள் உள்ளன. ஒன்று கட்டியை மட்டும் அகற்றுதல் மற்றது கர்ப்பப் பையையும் கட்டியுடன் சேர்த்து அகற்றுதல்.
வயது குறைந்த பெண்கள் மற்றும் மீண்டும் கருத்தரிக்கும் எண்ணம் உள்ள பெண்களில் கட்டியை மட்டும் அகற்றுவோம். (Myomectomy) இதன்போது கர்ப்பப்பை பாதுகாப்பாக தங்கவிடப்படுகிறது. இது முழு மயக்கம் கொடுத்து செய்யப்படும். இதற்கு எடுக்கப்படும் நேரம் கட்டிகளின் எண்ணிக்கையையும் பருமனையும் பொறுத்தது. 1– 2 மணித்தியாலங்கள் எடுக்கும் இதன் பின்னர் நீங்கள் வேண்டுமானால் கருத்தரிக்கலாம். ஆனால் இந்த சிகிச்சை முறையின் பின்னர் மீண்டும் கட்டி ஏற்பட வாய்ப்புள்ளது.
சற்று வயது கூடிய பெண்களில் அதாவது 40 வயதையும் தாண்டியவர்கள் மீண்டும் கருத்தரிக்கும் எண்ணம் இல்லாதவர்களில் கர்ப்பப் பையும் கட்டியும் முற்றாக அகற்றப்படும். (Hysterectomy) இதன் போது கட்டாயம் சூலகங்கள் (Ovaries) அகற்றப்பட வேண்டிய அவசியம் இல்லை. இது உங்களிடம் சத்திர சிகிச்சை முன்னர் கலந்து ஆலோசித்து முடிவு எடுக்கப்படும். சூலகங்கள் அகற்றப்பட்டால் உங்களுக்கு ஹோர்மோன் (Hormone) மாத்திரைகள் உட்கொள்ள நேரிடும். இதன்போதே மெனோபோஸ் அறிகுறிகள் கட்டுப்படுத்தப்படும். இவ்வாறான கட்டியுடன் கர்ப்பப்பையும் அகற்றும்போது மீண்டும் கட்டி ஏற்பட வாய்ப்பில்லை என்பது ஒரு அணுகூலமாகும்.
என்ன வகையான மருந்து வகைகள் இதன் சிகிச்சையில் வழங்கப்படும்?
ஈஸ்ரஜன் (Oestrogen) ஹோர்மோனே பைவுரோயின் வளர்ச்சிக்கு காரணம். இந்த ஈஸ்ரஜன் ஹோர்மோனை கட்டுப்படுத்துகின்ற மருந்துகளே பைவுரோயிட்டின் வளர்ச்சியையும் கட்டுப்படுத்தி சிறிதாக்கும். இதனை GNRH ஊசி என்று அழைக்கப்படும். இது ஒரு தற்காலிக சிகிச்சை முறையே. இதனை நிறுத்திய பின் கட்டி மீண்டும் வளர ஆரம்பிக்கும். அத்துடன் இந்த ஊசியின் விலையும் அதிகம். இதனால் எமது நாட்டில் அதிகம் பிரபல்யம் அடையவில்லை.
பைவுரோயிட்டு இருக்கும் போது கர்ப்பிணி காலங்களில் ஏற்படக்கூடிய சிக்கல்கள் எவை?
பைவுரோயிட்டின் அளவிலும் இருக்கும் இடத்திலும் பொறுத்து கருத்தரித்தல் தாமதம் அடையலாம். அவ்வாறு கருத்தரித்தால் ஒரு பகுதியினரில் எந்த பிரச்சினையும் இல்லாமல் கர்ப்பிணி காலம் நிறைவு பெற்று சாதாரண பிரசவமும் நடைபெறும். மறு பகுதியினால் கருச்சிதைவு, திகதிக்கு முந்திய பிரசவம், பிரசவ சிக்கல்கள் என்பன ஏற்பட வாய்ப்புள்ளது. எனினும் கர்ப்பிணி காலங்களில் பைவுரோயிட்டுக்கு என ஒரு சிகிச்சையும் வழங்குவதில்லை.
கு. சுஜாகரன்
நியூலங்கா மகப்பேற்று மருத்துவமனை
கொழும்பு 4.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM