நீதிமன்றங்களால் ஆறு பிடியாணைகள் பிறப்பிக்கப்பட்டும், நீண்ட காலமாகத் தலைமறைவு வாழ்க்கை நடத்தி வந்த நபர் வவுனியா பிராந்திய குற்றத்தடுப்பு பிரிவால் கைது செய்யப்பட்டுள்ளார்.

வேப்பங்குளத்தில் வீடொன்றை உடைத்து திருடிய சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரிலேயே குறித்த நபர் கைது செய்யப்பட்டார்.

எனினும், விசாரணையின்போது, அவர் பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடையவர் என்பதும் நீதிமன்றால் 6 திறந்த பிடியாணைகள் பிறப்பிக்கப்பட்டிருந்தவர் என்பதும் தெரியவந்துள்ளது.

கொழும்பு மேல் நீதிமன்றம், மட்டக்களப்பு நீதிமன்றம், கம்பளை நீதிமன்றம் உள்ளிட்ட பல்வேறு நீதிமன்றங்களே குறித்த நபர் மீது பிடியாணைகள் பிறப்பித்திருந்தன.

கைதுசெய்யப்பட்ட நபரிடம் இருந்து வேப்பங்குளம் பகுதியில் உள்ள வீட்டில் திருடப்பட்ட பொருட்களும் மீட்கப்பட்டுள்ளன.

மேற்படி நபரிடம் விசாரணைகள் நடத்திய பின்னர் அவரை நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.