மத்திய தரைக்கடலில்  கண்டெடுக்கப்பட்ட 26  பெண்களின் சடலங்கள் தொடர்பில்  இத்தாலி அரசு விசாரணைகளைத் தொடங்கியுள்ளது.

உள்நாட்டுப் போர் நடைபெற்று வரும் சிரியா, லிபியா உள்ளிட்ட ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து ஐரோப்பிய நாடுகளுக்கு  அடைக்கலம் தேடி  ஆபத்தான  கடல் வழிப்  பயணங்களை மேற்கொள்ளும்  அகதிகள்  பல பொழுதுகளில் விபத்தில் சிக்கி  பெருமளவில் உயிரிழக்கின்றனர்.

இந்நிலையில்  மத்திய தரைக்கடலில் 26 இளம் பெண்களின் உடல்களை  இத்தாலி அரசின் மீட்புப்படையினர் மீட்டுள்ளனர். இதில் 14 முதல் 18 வயது வரை கொண்ட அந்தப் பெண்கள் நைஜர் மற்றும் நைஜீரியாவைச் சேர்ந்தவர்களாக இருக்கலாம் என்றும், லிபியா வழியாக ஐரோப்பிய நாடுகளுக்கு செல்ல இந்த ஆபத்தான கடல் பாதையில் பயணித்திருக்கலாம் என்றும் நம்பப்படுகிறது.

படகு மூழ்கியதால் அவர்கள் இறந்திருக்கலாம் என்று பொதுவாக கூறப்பட்டாலும்,அவர்களின் உயிரிழப்பிற்கான உண்மையான காரணம்  இன்னும் வெளியாகவில்லை.   இந்த உடல்கள் நேற்று பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டதாகவும் அது தொடர்பான விசாரணைகள்  ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில், இளம்பெண்கள் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளதால் இது குறித்து விசாரணை நடத்தப்படும் என  அந்நாட்டு பொலிஸார் தெரிவிக்கின்றனர்.    

இந்த ஆண்டின் தொடக்கத்திலிருந்து இன்று வரையில்  2,839  பேர் ஆபத்தான மத்திய மத்திய தரைக்கடல்  பயணத்தின் போது  உயரிழந்துள்ளதாக  இடம்பெயர்வுக்கான சர்வதேச அமைப்பு தெரிவித்துள்ளது. மேலும் 150,982  பேர்  இந்த கடல் வழிப்பயணங்கள் மூலம்  ஐரோப்பிய கடற்கரைகளை அடைந்துள்ளனர் என்றும்  கூறப்படுகின்றது.