மியன்மாரின் ராக்கைன் மாநிலத்தில் றொஹிங்கியாக்களுக்கு எதிரான வன்முறைகள் தீவிரமடைந்து அவர்களில் 5 இலட்சத்துக்கும் அதிகமானவர்கள் அயல் நாடான பங்களாதேஷுக்கு தப்பியோடி சுமார் மூன்று மாதங்கள் கடந்த பிறகே கடந்த வாரம் அந்நாட்டின் தலைவியான ஆங்சாங் சூகீ அந்த மாநிலத்துக்கு விஜயம் செய்து நிலைவரங்களைப் பார்வையிட்டிருக்கிறார். கொடுமைகளுக்கு உள்ளாக்கப்படுகின்ற றொஹிங்கியாக்களுக்கு கொடுப்பதற்கு வெற்று வார்த்தைகளைத் தவிர அவரிடம் பெரிதாக எதுவும் இருக்கவில்லை.
சூகீயின் அந்த வார்த்தைகளும் கூட ராக்கைன் மாநிலத்தில் இடம்பெற்றுக் கொண்டிருப்பது (ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் இளவரசர் அல் ஹுசைன் வர்ணித்ததைப் போன்று) ‘இனச் சுத்திகரிப்புக்கான தெளிவான உதாரணம்’ என்பதை அவர் ஏற்றுக் கொண்டிருப்பதற்கான எந்த அறிகுறியையும் வெளிக்காட்டியதாக இல்லை. இது மிகவும் ஏமாற்றகரமான ஒரு நிலைமையாகும்.
சூகீ பல வருடங்கள் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டு கஷ்டங்களை அனுபவித்தவர். இரு வருடங்களுக்கு முன்னர் மியன்மாரில் நடைபெற்ற சுதந்திரமானதும் நேர்மையானதுமான தேர்தலில் வெற்றி பெறும் வரை இராணுவத்தின் இடைவிடாத பகைமைக்கு துணிச்சலுடன் முகங்கொடுத்தவர். ஆனால், தேர்தலுக்குப் பிறகு அவர் உயர் பதவியை பொறுப்பேற்ற போதிலும், இராணுவம் அவரது சிவிலியன் அரசாங்கத்தின் அதிகாரங்களைக் கத்தரித்துக் கொண்டது. பாதுகாப்பு, உள்நாட்டலுவல்கள் மற்றும் எல்லை விவகாரங்களின் பொறுப்பு தொடர்ந்தும் இராணுவத்திடமே இருக்கிறது.
நோபல் சமாதானப் பரிசைப்பெற்றவரான சூகீ இராணுவ நடவடிக்கைகள் ராக்கைன் மாநிலத்தில் ‘பயங்கரவாதத்தை’ கட்டுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டவை என்ற உத்தியோகபூர்வ நிலைப்பாட்டை எதிர்க்காமல் இருப்பதே நடைமுறைச் சாத்தியமானதும் அரசியல் ரீதியில் விவேகமானதும் என்று நினைத்துவிட்டார். இதற்கு இரு காரணங்கள் இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
முதலாவது, பல வருடகால இராணுவ ஆட்சிக்குப் பிறகு துளிர்த்து வருகின்ற ஜனநாயகத்தில் காணப்படக்கூடியதாக இருக்கின்ற ‘சஞ்சலமான அதிகாரச் சமநிலையை’ சீர்குலைத்து விடாமல் இருப்பதற்கு அவர் விரும்புகிறார். இரண்டாவது பெளத்த மற்றும் பாமர் இனத்தின் பெரும்பான்மையினவாதத்தின் மேலாதிக்க வளர்ச்சியைக் கண்டிருக்கும் மியன்மாரில் _ரொஹிங்கியாக்கள் மீது அனுதாபம் இல்லையென்பது வெளிப்படையானது. முஸ்லிம்களாகிய ரொஹிங்கியாக்கள் பிரசாவுரிமை அற்றவர்களாகவும் இருக்கிறார்கள். பெளத்த பாமர் பெரும்பான்மையின வாதம் ரொஹிங்கியாக்களை உத்தியோகபூர்வமாகவே அந்நியர்கள் என்று கருதி பாரபட்சத்துக்கும் கொடுமைக்கும் உள்ளாக்குகிறது.
சூகீயின் அரசாங்கத்தின் நடவடிக்கைகளை சர்வதேச சமூகம் பரந்தளவில் கண்டனம் செய்கின்ற போதிலும் ராக்கைன் மாநிலத்தில் மேற்கொள்ளப்படுகின்ற இராணுவ நடவடிக்கைகளை நியாயப்படுத்துவதன் மூலமாக அவர் பெரும்பான்மையினத்தவர்களைப் பகைத்துக்கொள்ளாமல் இருக்கக்கூடிய தந்திரோபாயத்தைக் கடைப்பிடிக்கிறார் என்பது பட்டவர்த்தனமாகத் தெரிகிறது.
ராக்கைன் மாநிலத்துக்கு கடந்த வாரம் மேற்கொண்ட விஜயத்தின் போது சூகீ நடந்து கொண்டமுறை ரொஹிங்கியாக்கள் தொடர்பிலான அரசாங்கத்தின் நிலைப்பாட்டில் உண்மையான அல்லது அர்த்தபுஷ்டியான மாற்றம் எதையும் செய்யும் உத்தேசம் அவருக்கு இல்லை என்பதை தெளிவாக வெளிக்காட்டுகின்றது என்று சர்வதேச அரசியல் அவதானிகள் அபிப்பிராயம் வெளியிட்டிருக்கிறார்கள். அதேவேளை, ரொஹிங்கியாக்கள் தங்களைத் தாங்களே பாதுகாத்துக் கொள்ள வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்கள், தங்களது சொந்தத் தாயகத்திலேயே வேண்டப்படாதவர்களாகவும் நாடற்றவர்களாகவும் இருக்கும் அவர்கள் இடர்மிக்க சூழ்நிலைகளின் கீழ் பங்களாதேஷுக்கு தப்பியோட நிர்ப்பந்திக்கப்பட்டிருக்கிறார்கள். தொடர்ச்சியாக வந்து கொண்டிருக்கும் அகதிகளுக்கு நிவாரணங்களை வழங்குவதற்காக ஆதரவைத் திரட்டும் முயற்சிகளில் பங்களாதேஷ் அரசாங்கம் இறங்கியிருக்கிறது.
இத்தகைய பின்புலத்திலேயே ரொஹிங்கியா அகதிகளுக்கு உதவுவதில் அலட்சிய மனோபாவத்தைக் காட்டும் இந்திய அரசாங்கத்தின் போக்கு துரதிஷ்டவசமானது என்று கடுமையான விமர்சனங்கள் கிளம்பியிருக்கின்றன. இந்தியாவின் முக்கியமான தேசிய ஆங்கிலத் தினசரிகளில் ஒன்றான ‘இந்து’ கடந்த சனிக்கிழமை தீட்டிய ஆசிரிய தலையங்கத்தில் ‘பாரதூரமான மனிதாபிமான நெருக்கடியைக் கையாளுவதற்கான செயற்பாடுகளுக்கு தலைமைதாங்க வேண்டிய பொறுப்பை கொண்ட இந்தியா அதில் தவறிவிட்டதன் விளைவாக ஒரு பிராந்திய வல்லரசு என்ற அதன் அந்தஸ்த்துக்கு பொருத்தமற்ற வகையில் நடந்து கொண்டிருக்கிறது என்ற எண்ணம் பரவலாக உருவாகியிருக்கிறது’ என்று குறிப்பிட்டிருக்கிறது.
திரும்பி வருகின்ற ரோஹிங்கியாக்கள் தங்_களை ராக்கைன் மாநிலத்தின் குடியிருப்பாளர்கள் என்று நிரூபித்தால் அவர்களை ஏற்றுக் கொள்ளத் தயாராயிருப்பதாக மியன்மார் அரசாங்கம் அறிவித்திருக்கிறது.
ஆனால், பிரஜாவுரிமை மறுக்கப்பட்ட ரொஹிங்யாக்கள் தங்களது கிராமங்களை விட்டு அவலச் சூழ்நிலையில் வெறுங்கையுடன் தப்பியோடிய நிலையில் எவ்வாறு தங்களை ராக்கைனின் வாசிகள் என்று நிரூபிக்கக் கூடியதாயிருக்கும் என்று தெரியவில்லை. மியன்மாரின் நழுவல்போக்கு துன்பத்தில் உழலும் ஆயிரக்கணக்கான ரொஹிங்கியாக்களுக்கு துரித உதவிகளை சர்வதேச சமூகம் வழங்க வேண்டியதை கட்டாயமாக்குகிறது.
(வீரகேசரி இணையத்தள செய்தி ஆய்வுகள்)
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM