மொனராகலை பகுதியில் பிரசவித்த சிசுவை, நீரோடைக்குள் வீசிய  இளம் தாயை, மொனராகலைப் பொலிஸார் நேற்று  மாலை கைது செய்துள்ளனர்.

தாயால் நீரோடையில் எறியப்பட்ட சிசு, கிராமவாசிகளால் மீட்கப்பட்டு , மொனராகலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சையளிக்கப்பட்டு வருகின்றது.

மொனராகலையை அண்மித்த இறப்பர் தோட்டத்திலேயே மேற்படி சம்பவம் இடம்பெற்றுள்ளது. கைது செய்யப்பட்ட இளம் தாய், விசாரணைக்குட்படுத்தப்பட்ட போது, வீட்டிற்கருகாமையிலுள்ள திருமணமான ஒருவர் தன்னுடன் ஏற்படுத்திக் கொண்ட உறவினால், தான் கர்ப்பவதியாகியதாகவும், அதன்பிறகு அவர் தன்னை கைவிட்டு சென்றதாகவும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, கர்ப்பவதியாகிய விடயம் எவருக்கும் தெரியாமலிருக்க வேண்டும். அப்படியே தெரிய வந்தால், நான் கிருமிநாசினி அருந்தித் தற்கொலை செய்து கொள்வேனென்றும் தன்னிடம் கூறியதால் கர்ப்பவதியாகிய விடயம் எவருக்கும் கூறவில்லையென்றும், அத்தாய் பொலிஸாருக்களித்த வாக்கு மூலத்தில் தெரிவித்துள்ளார்.

கிராமவாசிகளால் மீட்கப்பட்ட சிசு சிறு கீறல் காயங்களுடன், மொனராகலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளது. பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட இளம் பெண், இரத்தப்போக்கு நிலையில் பாதிக்கப்பட்டிருப்பதால், அவரும் பொலிஸ் பாதுகாப்புடன் மொனராகலை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.