சி.எஸ்.என். தொலைக்காட்சி அலைவரிசை ஊடாக முன்னெடுக்கப்பட்ட கறுப்புப் பணம் சுத்திகரித்தல் சட்டத்தின் கீழான குற்றங்கள் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதியின் மகன் லெப்டினன் யோஷித்த ராஜபக்ஷவை கைது செய்ய குறித்த தொலைக்காட்சி நிறுவனத்தின் மின்னஞ்சல் ஆதாரங்களே பிரதானமாக இருந்ததாக நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவின் உயர் அதிகாரி ஒருவர் கேசரிக்கு தெரிவித்தார்.

சி.எஸ்.என். நிறுவனத்தின் தீர்மானங்கள் எடுக்கும் ஏக நபராகவும் தலைவராகவும் யோஷித்த ராஜபக்ஷவே செயற்பட்டுள்ளார் என்பதை அந்த தொலைக்காட்சி நிறுவனத்தின் மின்னஞ்சலை விஷேட ஆய்வுகளுக்கு உட்படுத்திய போதே தெரியவந்ததாகவும் அதன் அடிப்படையிலேயே அவர் கைது செய்யப்பட்டதாகவும் அந்த அதிகாரி சுட்டிக்காட்டினார்.

அத்துடன் கைது செய்யப்பட்ட ஏனைய நால்வரில் வெலிவிட்ட, திஸாநாயக்க மற்றும் பெர்ணான்டோ ஆகியோர் அந்த தொலைக்காட்சி நிறுவனத்தின் ஆரம்ப பணிப்பாளர்களாக பெயரிடப்பட்டுள்ளனர். நிஸாந்த ரணதுங்க பிரதம நிறைவேற்று அதிகாரியாக செயற்பட்டுள்ளமை உறுதியான நிலையிலேயே அந்த நிறுவனத்தின் ஊடாக இடம்பெற்ற கறுப்புப் பணம் சுத்திகரிக்கும் சட்டத்தின் கீழான குற்றங்கள் தொடர்பில் பொறுப்புக் கூற வேண்டியவர்கள் என பெயரிடப்பட்டதாக அந்த அதிகாரி சுட்டிக்காட்டினார்.

இதேவேளை தற்போது வெளிப்படுத்தப்பட்ட தகவல்களுக்கு அமைவாக மேலதிக விசாரணைகளை மேற்கொள்ள, யோஷித்த உள்ளிட்ட சந்தேக நபர்கள் வெளியே இருப்பது பாதிப்பை ஏற்படுத்தும் என்பதாலேயே அவர்கள் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்ப்ட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவி பொலிஸ் அத்தியட்சர் ருவன் குணசேகர தெரிவித்தார்.

தண்டனை சட்டக் கோவையில் 32 மற்றும் 109 (5) ஆகிய அத்தியாயங்கள் ஊடக பொலிஸ் அதிகாரிகளுக்கு உள்ள அடிப்படை பொறுப்புக்கு அமைய கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த தொலைக்காட்சி நிறுவனத்தை நிறுவ 234 மில்லியன் ரூபா ஆரம்ப மூலதனமாக முதலீடுச் செய்யப்பட்டுள்ளதுடன் அந்த முதலீட்டு மார்க்கங்களைக் காட்ட தலைவர் உள்ளிட்ட பணிப்பாளர்களினால் முடியவில்லை என பொலிஸ் பேச்சாளர் சுட்டிக்காட்டினார்.

வெளி நாட்டிலிருந்து சட்ட விரோதமாக நிறுவனம் ஒன்றூடாகவே சி.எஸ்.என். இற்கான முதலீடுகள் செய்யப்பட்டுள்ளமை ஆரம்பகட்ட விசாரணைகளில் வெளிப்படுத்திக் கொள்ளப்பட்டுள்ளதாகவும் இதன் அடிப்படையிலேயே கறுப்பு பணம் சுத்திகரிக்கும் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

இந்த குற்றச் சாட்டுக்கு மேலதிகமாக போலி ஆவணங்களை தயாரித்தல், திட்டமிட்ட மோசடி, சுங்க சட்டத்தை மீறியமை மற்றும் நிறுவன சட்டங்களை மீறியமை ஆகியன தொடர்பிலும் அரசாங்க சொத்துக்களை தவறாக பயன்படுத்தியமை தொடர்பிலும் சந்தேக நப ர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படவுள்ளன.

விசாரணைகள் நிறைவடைந்ததும் சந்தேக நபர்களுக்கு எதிராக மேல் நீதிமன்றில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யவும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என பொலிஸ் பேச்சாளர் தெரிவித்தார்.

விளக்கமறியலில் உள்ள யோஷித்த உள்ளிட்ட குழுவினரை பார்வையிட நேற்று ஒன்றிணைந்த எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வெலிக்கடை சிலர் கொழும்பு விளக்கமறியல் சிறைக்கு சென்றனர். தினேஷ் குணவர்தன, பந்துல குணவர்தன, பவித்ராதேவி வன்னியாராசசி , ரோஹித்த அபேகுணவர்தன, டலஸ் அழகப் பெரும, உதய கம்மன் பில, விமல் வீரவன்ச, ஜயந்த சமர வீர ஆகிய பாராளுமன்ற உறுப்பினர்கள் நேற்று முற்பகல் இவ்வாறு சிறைச்சாலைக்குச் சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.