ஆடையகம் ஒன்றில் கொள்வனவு செய்த ஆடைகளில் சந்தேகத்திற்கிடமான வகையில் பொருள் ஒன்று காணப்படுவதாக கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டிற்கமைய பொலிஸாரினால் அரசாங்க இரசாயனவியல் ஆய்வாளரின் பகுப்பாய்வு அறிக்கை ஒன்றினை பெற்றுக் கொள்வதற்காக விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு காலி பிரதான மஜிஸ்த்திரேட் அனுமதி வழங்கியுள்ளார்.

காலியில் கடந்த 28ஆம் திகதி தாய் ஒருவர் தனது 19 வயது மகனோடு நகரத்திலுள்ள ஆடையகம் ஒன்றிற்கு சென்று 4,300 ரூபா பெறுமதியான இரண்டு காற்சட்டைகளையும் இரண்டு டி.ஷேர்ட்களையும் கொள்வனவு செய்துள்ளார். 

வீட்டிற்கு சென்று கொள்வனவு செய்த ஆடைகளை துவைப்பதற்காக வாளி ஒன்றினுள் போட்ட போது ஒரு கட்டை காற்சட்டையின் முன் பகுதியில் பொத்தானுக்கு கீழ் பிரவுன் நிறத்திலான ஒட்டும் தண்மையிலான பொருள் இருப்பதை கண்ட தாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

கிடைக்கப் பெற்ற முறைப்பாட்டைத் தொடர்ந்து புதிதாக கொள்வனவு செய்யப்பட்ட ஆடையிலிருந்த பொருள் என்ன வகையைச் சேர்ந்த இரசாயனம் ? அதனால் உடலுக்கு ஏதும் பாதிப்புக்கள் ஏற்படுமா? என பரிசோதித்து பார்த்து அரசாங்க ஆய்வாளரிடமிருந்து அறிக்கை ஒன்றை பெறுவதற்கு நீதி மன்றில் முன் வைக்கப்பட்ட கோரிக்கைக்கு காலி மஜிஸ்த்திரேட் அனுமதி வழங்கியுள்ளார்.